போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய இசான் கிஷான் அதிரடியாக ஆட வேண்டிய சூழலில் 20 பந்துகள் எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே அடித்திருந்தார்.
இது ரோகித் சர்மாவை கடுப்படையச் செய்தது. இஷான் கிஷன் மெதுவாக விளையாடுவதை பார்த்து கடுப்பான ரோகித் சர்மா, வேகமாக விளையாடு என்று ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில் அணி நிர்வாகம் இஷான் கிஷனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவரிடம் தெளிவாக கூறிவிட்டதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இஷான் கிஷன் மிகவும் திறமை வாய்ந்த வீரர் தான். அவர் இந்தியாவுக்காக குறைந்த நாட்களிலேயே விளையாடி இருக்கிறார். ஆனால் அதற்குள் ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் எல்லாம் அடித்து விட்டார். அவரிடம் திறமை இருக்கிறது.
அந்த திறமையை சரியான முறையில் செதுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. கிஷன் தன்னுடைய திறமையை நிரூபிக்க போதுமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார். அதிரடியாகவும் விளையாடும் திறமை இருக்கிறது.நான் அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன், அணி நிர்வாகம் உன்னிடம் இதை தான் எதிர்பார்க்கிறது என்பதை விளக்கி விட்டேன்.

இஷான் கிஷனுக்கு நான் முழு சுதந்திரம் வழங்கி இருக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன் அவரிடம் விளையாட்டுத் திறமை இருக்கிறது. சுதந்திரமும் அவருக்குத் தேவையான அளவு நாங்கள் கொடுத்து விட்டோம். அவருக்கு தேவையான வாய்ப்புகளையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். இஷான் கிஷன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாகவே விக்கெட் கீப்பிங் செய்தார்.
முதல் டெஸ்டிலே அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துகள் திரும்பும் போது இஷான் கிஷன் அதனை லாவகமாக எதிர்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு ரன் எடுத்திருக்கும் போதே நாங்கள் டிக்ளேர் செய்ய நேர்ந்தது. எங்களுடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இஷான் கிஷனுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு வந்தால் அவர் நிச்சயம் அதிரடி காட்டுவார் என நம்புகிறேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.