டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிவடைந்து விட்டது.
இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் 171 ரன்களும், பவுலிங்கில் அஸ்வின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளனர்.

வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா அணிக்காக எப்போது ரன்கள் அடித்தாலும் அது ஸ்பெஷல்தான். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களில் சுருட்டியது தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்று நாங்கள் உணர்ந்தோம்.
இதனால் இந்த ஆடுகளத்தில் ஒரு முறை தான் பேட்டிங் செய்ய வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். ஜெய்ஸ்வால் அறிமுகப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் திறமை வாய்ந்த வீரர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அவர் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார்.
இனி அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை காட்டுவார் என நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் முதல் ரன் அடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் காத்திருந்தேன். அதனால் தான் நாங்கள் டிக்ளர் செய்ய போகிறோம் விரைவில் விளையாடுங்கள் என்று கூறினேன். மேலும் அஸ்வினும், ஜடேஜாவும் தங்களுடைய அனுபவத்தை இன்று காட்டி இருக்கிறார்கள்.
புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் மிகப்பெரிய வெற்றியுடன் தொடங்கி இருக்கிறோம்.நாங்கள் எந்த ஆடுகளத்தில் எந்த சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது குறித்து கவலைப்படாமல் மனதளவில் அதற்கு தயாராக இருக்கிறோம். எங்கள் அணியில் இளம் வீரர்கள் சிலர் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காகத்தான் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். அஸ்வின் ஜடேஜா எவ்வாறு செயல்பட்டு இருக்கிறார்கள் என்று இந்த போட்டியில் முடிவை பார்த்தாலே நமக்குத் தெரியும் என்று ரோகித் சர்மா பாராட்டினார்.