மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகவும் அவரையே நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட போவதாக பிசிசிஐ வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த போது, ஒருநாள் டி 20 போட்டிக்கு என தனி கேப்டன்கள் இருக்கக்கூடாது என்று கூறி இருந்தார். இதன் காரணமாக ஒரு நாள் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலியை பிசிசிஐ நீக்கியது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது ஆண்டுகள் சுழன்று ஓட ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் தான் அவர் விளையாடுகிறார். இதனால் டெஸ்ட் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டன் ஆகவும், டி20 போட்டிக்கு சூரிய குமார் கேப்டன் ஆகவும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் தொடர்கின்றனர்.
இது பிசிசிஐயின் கொள்கைக்கு மாறான முடிவாக கருதப்படுகிறது. இந்த சூழலில் அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை நடைபெறும் போது ரோகித் சர்மாவுக்கு கிட்டத்தட்ட 40 வயதாகிவிடும். இதனால் ரோகித் சர்மா அந்த தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஆனால் ரோகித் சர்மா விடாப்படியாக அந்த தொடரில் விளையாடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.
எனினும் ரோகித் சர்மாவை நம்பி ரிஸ்க் எடுக்காத பிசிசிஐ டெஸ்ட் போட்டிக்கு புதிய கேப்டனை நியமித்தது போல் ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கும் கில்லையே புதிய கேப்டனாக நியமிக்க முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் விரைவில் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டனாக கில்லும் டி20 போட்டியின் கேப்டனாக சூரிய குமார் தொடர்வார்கள்.ரோகித் சர்மா நீக்கப்பட்டால் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் முழு ஆதிக்கம் செலுத்தும் நபராக மாறிவிடுவார்.