மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி t20 உலக கோப்பைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
ரோகித் சர்மா, கம்பீர் கூட்டணியில் இதுவரை இந்தியா பல ஆண்டுகளாக தோற்காத இடங்களில் தோற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மொத்தமாகவே அவர் 32 ரன்கள் தான் அடித்து இருந்தார். இதனால் ரோகித் சர்மா மீது கடும் விமர்சனம் இருந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுடன் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் ஆலோசனை நடத்திருக்கிறார். இதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தான் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருக்கிறார். ரோகித் சர்மா பேட்டிங்கில் தற்போது தடுமாறி வருவதால் பார்முக்கு திரும்ப இன்று ரஞ்சிக் கோப்பை மும்பை அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இதன் மூலம் தமக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதற்கான பேட்டிங் நுணுக்கங்கள் இருந்தால் தொடர்ந்து இங்கிலாந்து போட்டிகள் பங்கேற்க அவர் முடிவு எடுப்பார்.
ஆனால் தேர்வு குழுவை பொருத்தவரை ரோகித் சர்மா கேப்டனாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை அமையும். ஆனால் ரோகித் சர்மாவுக்கு ஏற்கனவே 38 வயது ஆகிவிட்டதால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய மணிக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு புதிய கேப்டன்களை நியமிக்க பிசிசிஐ முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.