ரோகித் சர்மா பெயரையே குறிப்பிடவில்லை.. இனி அவ்வளவு தான்.. சடகோபன் ரமேஷ் கருத்து
மும்பை: 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை பற்றி பேசும்போது இந்திய அணி கேப்டன் கில், ரோகித் சர்மாவின் பெயரை குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை திட்டத்தில் ரோகித் சர்மா இல்லை என்பதை மறைமுகமாக கில் உணர்த்திவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 39 வயதான ரோஹித் சர்மா 47 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 26 ரன்கள் தான் சேர்த்தார். ரோகித் சர்மா பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருவது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து போட்டி முடிந்தவுடன் நடந்த பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய கில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய பேட்டிங் வரிசையில் கடந்த 10 ஆண்டுகளாக முதுகெலும்பு போல் இருந்தனர். இந்திய அணியின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய திறமை மற்றும் அனுபவம் எங்களுக்கு விலை மதிக்க முடியாதது என்று கூறியிருந்தார்.
அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலகக் கோப்பை தொடர்பான காம்பினேஷன் பற்றி பேசும் போது, கில் எந்த காம்பினேஷன் சரியாக இருக்குமோ, எந்த வீரர்கள் சரியான தேர்வாக இருப்பார்களோ அதை வைத்து தான் நாங்கள் முடிவு எடுக்க முடியும். தற்போது அணியில் இல்லாத வீரர்கள் கூட மீண்டும் வரலாம் என்று கூறியிருந்தார்.
அப்போது விராட் கோலி பெயரை குறிப்பிட்ட கில், ரோகித் சர்மாவின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், கில் அளித்த பேட்டியை பார்த்தோம் என்றால் 2027 உலக கோப்பை பற்றி பேசும்போது அவர் விராட் கோலியின் பெயரையே திரும்பத் திரும்பச் சொன்னார்.
ரோகித் சர்மாவின் பெயரை குறிப்பிடவில்லை. இதன் மூலம் இந்தியாவின் உலகக் கோப்பை திட்டத்தில் ரோகித் சர்மா இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு சாதனைகளை செய்தும் அவருக்கு அழுத்தம் தருவது உண்மையில் வேதனையாக இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் அவர் இடத்திற்கு வரலாம்.
ஆனால் அவர்கள் ரோகித் இடத்தை பிடிக்க நீண்ட நாட்கள் ஆகலாம். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஒரு தலைமுறைக்கான வீரர்கள். நான் இன்னும் ஒரு விஷயத்தை நினைவு கூற விரும்புகிறேன். இந்திய அணி தோனியை இன்னும் மாற்றக்கூடிய வீரரை கண்டுபிடிக்கவில்லை என்று சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

