மும்பை: 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது பற்றி, அப்போதைய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது.
அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடியது யார் என்பது பற்றி ரோஹித் சர்மா பேசினார். ஆல்ரவுண்டர் ஒருவர் தான் அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடினார் என அவர் சுட்டிக்காட்டினார். விராட் கோலி அந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்து இருந்த நிலையிலும் அவர்தான் வெற்றிக்கு காரணம் என ரோஹித் சொல்லவில்லை.

இது பற்றி ரோஹித் சர்மா பேசியதாவது: "அந்த இறுதிப் போட்டியின் போது நான் பதற்றத்தில் இருந்தேன். நான் சௌகரியமான மனநிலையில் இல்லை. நாங்கள் தென்னாப்பிரிக்காவை ஆதிக்கம் செலுத்த விட்டுவிட்டோமோ என்று எண்ணினேன். அதே சமயம் எனது மனதின் பின்னே, நமது அணியின் லோயர் மிடில் ஆர்டர் அதிகமாக இந்தத் தொடரில் பேட்டிங் செய்யவில்லை, மேலும் வாய்ப்பு கிடைத்த போதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது.
ஆனால், அக்சர் படேல் அந்த இறுதிப் போட்டியில் ஆடிய ஆட்டத்தைப் பற்றிப் பலரும் பேசவில்லை. அவர் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதுதான் அந்தப் போட்டியை மாற்றியது. மேலும், ஒருவர் அந்த இறுதிப் போட்டி முழுவதும் நின்று பேட் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். விராட் கோலி அதை அற்புதமாகச் செய்தார்," என்று ரோஹித் சர்மா கூறினார்.
அந்த இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். அப்போது அக்சர் படேல் தான் இந்திய அணியின் பேட்டிங்கைத் தூக்கி நிறுத்தினார். அவர் இல்லை என்றால் மறுபுறம் விராட் கோலியால் பெரிய இன்னிங்ஸ் ஆடி இருக்க முடியாது.
அந்தப் போட்டியில் அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து 19வது ஓவர் வரை ஆடுகளத்தில் நின்றார். அதனால்தான் இந்திய அணி அந்த இறுதிப் போட்டியில் 176 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் வெற்றியை நெருங்கி வந்தாலும், 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு கடைசி சில ஓவர்களில் அற்புதமாக இருந்தது. பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.