“ ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்”.. வங்கதேசத்துடனான கிரிக்கெட் தொடர்.. சவால் குறித்து ரோகித் சர்மா பேச்சு!
டாக்கா: வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ள கருத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது. இதற்காக டாக்கா சென்றடைந்துள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தொடர்
நியூசிலாந்து தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி வங்கதேச தொடரில் கம்பேக் கொடுத்தே தீர வேண்டும். இதே போல டி20 உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு வங்கதேசமும் பழிதீர்க்க காத்துள்ளது. எனவே அவர்களை சமாளிப்பதற்காக இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே,.எல்.ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளனர்.

ரோகித் பேச்சு
இந்நிலையில் இந்திய அணி எப்படி தயாராகி வருகிறது என்பது குறித்து கேப்டன் ரோகித் பேசியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கதேசத்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் எங்களுக்கு மிக எளிமையானது ஒன்றும் கிடையாது. அவர்கள் நன்கு முன்னேறிய அணியாகும். கடந்த சில வருடங்களாக வங்கதேசத்துடனான போட்டிகள் மிகுந்த ஆர்வத்துடனும், சவால் மிக்கதாகவும் உள்ளது. எளிதாக வெற்றி பெற முடிவதில்லை.

சரியாக செய்யனும்
வங்கதேச அணியை நாங்கள் வெல்ல வேண்டுமென்றால், இந்திய அணியில் ஒவ்வொரு வீரரும் தங்களுடைய பணிகளை சரியாக செய்தால் மட்டுமே முடியும். அவர்களை குறைத்து எடை போடாமல் தான் இந்த முறை விளையாடப் போகிறோம். அப்படி ஒருவேளை நினைத்தால் தோல்வி மிஞ்சும் என்ற வகையில் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

சாதாரண காரியம் அல்ல
வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனென்றால் பல் வெற்றிகளை அந்த அணி சொந்த மண்ணில் தான் பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவை போன்று வங்கதேசத்தில் அவர்களின் ரசிகர்கள் அதிகளவில் கூடி இருப்பார்கள் என்பதால் இந்தியாவுக்கு பதற்றம் உருவாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications