மும்பை : ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சில நட்சத்திர வீரர்கள் இடம்பெறாமல் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியின் திறமை வாய்ந்த வீரராக கருதப்படும் சஞ்சு சாம்சனுக்கும் இதே நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தமக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை வெளிப்படையாக ரோகித் சர்மா பேசியிருக்கிறார். அதில் ஒரு வீரர் உலகக் கோப்பை வென்ற அணியிலிருந்து நீக்கப்பட்டால் அவர் எப்படி உணர்வார் என்பதை என்னை விட யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான் இடம்பெறவில்லை. இதனால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்து விட்டது என்பது போல் நான் சோகமாக இருந்தேன். அப்போது யுவராஜ் சிங் தான் என்னை தேற்றி மீண்டும் நான் அணிக்குள் வர உதவிகரமாக இருந்தார். நான் சோகமாக எனது அறையில் அமர்ந்து கொண்டு அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.
அப்போது யுவராஜ் சிங் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். அதன் பிறகு இருவரும் டின்னருக்கு சென்று இரவு உணவை சாப்பிட்டோம். அப்போது அணியில் சேர்க்கப்படவில்லை என்றால் நமக்கு எந்த மாதிரியான சோகம் ஏற்படும் என்று எனக்கு நன்றாகவே தெரியும் என்று யுவராஜ் சிங் கூறினார். மேலும் இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. நீ இப்போது இளம் வீரராக இருக்கிறார்.
நீ இன்னும் பல ஆண்டுகள் விளையாடப் போகிறாய். நாங்கள் உலக கோப்பையில் விளையாடும் போது நீ உன்னுடைய கிரிக்கெட் யுக்திகளை மேம்படுத்த வாய்ப்பாக இருக்கும். உன்னிடம் என்ன மைனஸ் இருக்கிறது. உன்னுடைய திறமை என்ன என்பதை பார்த்து பயிற்சி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக உனக்கு இருக்கும். நிச்சயமாக நீ அணிக்குள் மீண்டும் வர முடியும். நீ இந்திய அணிக்காகவும் உலகக்கோப்பை தொடரிலும் நிச்சயம் விளையாடுவாய்.
நீ விளையாடாமல் போக எந்த வாய்ப்பும் இல்லை என்று யுவராஜ் சிங் என்னிடம் கூறினார். அவருடைய பேச்சைக் கேட்டு நானும் உடனே என்னுடைய பயிற்சியை தொடங்கினேன். அதிலிருந்து மீண்டும் இந்திய அணிக்கு நான் திரும்பினேன். அன்று முதல் இன்று வரை எனக்கு நல்ல விஷயங்களை நடந்து இருக்கிறது. உலகக்கோப்பை போன்ற அணியில் சேர்க்கப்படவில்லை என்றால் நம் மனது எந்த அளவுக்கு பாதிக்கும் அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பது வாயால் சொல்வது கூட அவ்வளவு சுலபம் கிடையாது என்று ரோஹித் சர்மா கூறினார்.