மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த போது, ரிஷப் பண்ட் செய்த ஒரு செயல் அந்த அணியின் வேகத்தை மட்டுப்படுத்தியது. அது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என கேப்டன் ரோஹித் சர்மா "தி கிரேட் இந்தியன் கபில் ஷோ" என்ற நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஐந்து ஓவர்கள் மீதம் இருந்தபோது தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அந்த அணியின் கைகளில் 6 விக்கெட்கள் இருந்தன. ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் களத்தில் இருந்தனர். 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில் 16வது ஓவரின் முடிவில் ரிஷப் பண்ட் முழங்காலில் வலி இருப்பதாக தெரிவித்தார்.

அதனால், இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் களத்துக்கு ஓடி வந்தார். அவர் பண்ட்டின் முழங்காலில் டேப் (Tape) வைத்து சுற்றி முதலுதவி சிகிச்சை அளித்தார். அதனால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது. அதன் பின் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்தில் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து இருந்த கிளாசன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் தென்னாப்பிரிக்க அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அதைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா. மேலும், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீண்டுங்கள்; அதனால் என்ன பிரச்சனை வந்தாலும் அதை நாம் போட்டிக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி வீரர்களுக்கு அப்போது கூறியதாக தெரிவித்தார்.
இது பற்றி ரோஹித் சர்மா பேசியது இதுதான் - "தென்னாப்பிரிக்கா 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த போது ஒரு சிறிய இடைவேளை எங்களுக்கு கிடைத்தது. ரிஷப் பண்ட் அவரது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி போட்டியை சிறிது நேரம் நிறுத்தி வைத்தார். அவருக்கு அப்போது முழங்காலில் வலி ஏற்பட்டது. அதனால், அவர் முழங்காலில் டேப் சுற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் போட்டி சிறிது நேரம் நின்றது."
"அப்போது போட்டி மிக வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும் விரைவாக பந்து வீச வேண்டும் என்று தான் விரும்புவார். ஆனால், அந்த வேகத்தை நிறுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இருந்தது. நான் அப்போது ஃபீல்டிங் அமைத்துவிட்டு, பந்து வீச்சாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே பார்த்தபோது ரிஷப் பண்ட் மைதானத்தில் கீழே விழுந்து இருந்தார். பிசியோதெரபிஸ்ட் உள்ளே வந்து அவர் முழங்காலில் டேப் சுற்றிக் கொண்டு இருந்தார்."
"மீண்டும் போட்டி ஆரம்பிப்பதற்காக கிளாசன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், இது மட்டுமே எங்கள் வெற்றிக்கு காரணம் என்று நான் சொல்லவில்லை. இதுவும் ஒரு காரணம். பண்ட் அவரது புத்திசாலித்தனத்தை எங்களுக்கு சாதகமாக மாற்றினார். அதன் பின் ஹர்திக் பாண்டியா கிளாசன் விக்கெட்டை அந்த ஓவரில் வீழ்த்தினார். அதன் பின் தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தம் அதிகரித்தது."
"அதன் பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சீண்டினார்கள். அது என்ன என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால், அப்போது நாங்கள் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் அதை செய்தோம். அதற்காக சில அபராதங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோம். அப்போது நான் இந்திய வீரர்களிடம் என்ன சொன்னேன் என்றால். "அம்பயர்களையும், ரெப்ரீக்களையும் நாம் பின்னர் சமாளித்து கொள்ளலாம்" என்றேன்." இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.