"நான் இன்னும் கமிட் ஆகல".. அகர்கரை மறைமுகமாக கலாய்த்தாரா ரோஹித் சர்மா? டி-ஷர்ட் வாசகத்தால் சூசகம்
மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, தொலைக்காட்சியில் புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இடம்பெற்றிருந்த வாசகம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கருக்கு ரோஹித் சர்மா கொடுத்த மறைமுக பதிலடி இது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
ரோஹித் சர்மா தொகுத்து வழங்கும் 'ஃபேமிலி ஃபுல் ஹவுஸ்' என்ற நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 19-ம் தேதி சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோவில், ரோஹித் சர்மா வெள்ளை நிற டி-சர்ட் அணிந்திருந்தார். அதில் 'நான்-கமிட்டல் (Non-Committal)?' என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. இது உறுதியான முடிவு எடுக்காமல் இருப்பதை குறிக்கும்.

இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான சர்ச்சை உள்ளது. கடந்த 2025 அக்டோபர் மாதம் பேசிய பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், 2027 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இன்னும் எந்த உறுதியான முடிவையும் தெரிவிக்காமல் பிடி கொடுக்காமல் இருப்பதாகக் கூறியிருந்தார்.
தற்போது அகர்கர் பயன்படுத்திய அதே வார்த்தையைத் தனது டி-சர்ட்டில் அச்சிட்டு ரோஹித் சர்மா அணிந்திருப்பது, தேர்வுக்குழு தலைவரை அவர் கிண்டல் செய்துள்ளதையே காட்டுகிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அகர்கரின் கருத்தை ரோஹித் சர்மா இன்னும் மறக்கவில்லை என்பதை இந்த டி-சர்ட் சுட்டிக்காட்டுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், படப்பிடிப்பு தளத்தில் ரோஹித் சர்மாவிற்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அறையில், அவரது இந்திய ஜெர்சி, 'ஹிட்மேன்' என்ற வாசகம், பேட் மற்றும் ஹெல்மெட் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் மைதானத்தில் சிக்சர்களாக விளாசி ரசிகர்களை மகிழ்வித்த ஹிட்மேன், தற்போது சின்னத்திரையிலும் தனது புதிய இன்னிங்ஸை தொடங்கத் தயாராகிவிட்டார்.


Click it and Unblock the Notifications

