இந்திய அணியிலிருந்து ரோகித் சர்மாவை முடிந்தால் நீக்கி பாருங்கள்.. உலககோப்பை வென்ற வீரர் எச்சரிக்கை
மும்பை: ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த வதந்திகளுக்கு மத்தியில் அவருக்கு ஆதரவாக 1இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால்குரல் கொடுத்துள்ளார். தேர்வாளர்களுக்கு தைரியம் இருந்தால் தாராளமாக ரோஹித்தைக் அணியில் இருந்து நீக்கிப் பார்க்கட்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு பிறகு அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா வெறும் 37 ரன்கள் மட்டுமே எடுத்ததால், அவர் இனி தேர்வாளர்களின் திட்டத்தில் இல்லை என்றும், மூன்றாவது ஒருநாள் போட்டியே அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் என்றும் வதந்திகள் பரவின.

இந்தத் தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரை 2-1 என இழந்த போதிலும், ரோஹித் சர்மா 110 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 138 ரன்கள் குவித்து, விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக யூடியூப் சேனலில் பேசிய மதன் லால், ரோஹித் சிறப்பாக விளையாடி தொடர்ந்து விளையாட விரும்பும் போது அவரை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று குறிப்பிட்டார். தேர்வாளர்கள் ரோஹித்திடம் சென்று அவர் தங்களின் திட்டத்தில் இல்லை என்று கூறினால், அதற்குரிய காரணத்தைக் கேட்க 39 வயதான ரோஹித்திற்கு முழு உரிமை உண்டு என்று மதன் லால் கூறினார்.
"ஒவ்வொரு வீரரும் ஒரு நாள் ஓய்வு பெறத்தான் வேண்டும். அது இன்றோ அல்லது நாளையோ நடக்கலாம், அனைவரும் ஒரு காலத்தில் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி, இன்னும் விளையாட விரும்பினால், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்களுக்கு தைரியம் இருந்தால் அவரை அணியில் இருந்து நீக்குங்கள்.
அவர் ரன்களைக் குவித்துக் கொண்டுதானே இருக்கிறார். அதுதான் சரியாக இருக்கும். அவரிடம் சென்று 'நீங்கள் எங்கள் திட்டங்களில் இல்லை' என்று கூறுவது சரியல்ல. 'ஏன்? நான் ரன்கள் எடுக்கிறேன், நன்றாக விளையாடுகிறேன், பிறகு ஏன் உங்கள் திட்டத்தில் நான் இல்லை?' என்று கேட்கும் முழு உரிமை அவருக்கு உள்ளது" என்று கூறினார்.
"வீரர்களை நாம் ஏன் தொடர்ந்து விமர்சிக்கிறோம் என்று எனக்குப் புரியவில்லை. நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறார். நமக்கு ரோஹித் சர்மா போன்ற ஒரு வீரர் தேவை. அவர் விளையாடும் விதமும், அவரிடம் இருக்கும் ஷாட்களும் நமது அணியில் வேறு யாருக்கும் கிடையாது. இந்திய கிரிக்கெட்டில் அவரைப் போல பேட்டிங் செய்த எவரையும் நான் பார்த்ததில்லை. நமக்கு பல சிறந்த வீரர்கள் கிடைத்துள்ளனர், ஆனால் ரோஹித் பேட்டிங் செய்யும் விதம் முற்றிலும் மாறுபட்டது" என்றார்.
"பாருங்கள், ரோஹித் சர்மா ஐந்து போட்டிகளில் விளையாடி அதில் இரண்டு போட்டிகளில் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தால் கூட, அவர் எனக்கு மிகச் சிறந்த வீரர் தான். யாராலும் அனைத்து போட்டிகளையும் வெல்ல முடியாது, எந்தவொரு கேப்டனாலும் ஒவ்வொரு முறையும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது" என்று மதன் லால் கூறினார்.ரோஹித் சர்மா இதுவரை 280 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடி 48.95 சராசரி மற்றும் 93.04 ஸ்டிரைக் ரேட்டில் 11,895 ரன்கள் குவித்துள்ளார். இதில் 62 அரைசதங்கள் மற்றும் 34 சதங்கள் அடங்கும.


Click it and Unblock the Notifications

