மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் நேற்று அவர் வராதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. ஆனால் ரோகித் சர்மா நேற்று பேட்டிங் பயிற்சிக்கு வரவில்லை என்றாலும் அவர் செய்த காரியம் புது நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
ரோகித் சர்மா கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா மொத்தமாகவே 31 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். இதனால் ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்டில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதனால் ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஒரு நாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்வு குழு அவருக்கு அறிவுறுத்தியது. எனினும் ரோஹித் சர்மா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நாடு திரும்பிய ரோகித், தற்போது ரஞ்சிப் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகி வந்தார்.
இதற்காக மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்து ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. இதனால், ரோகித் ரஞ்சிப் போட்டியில் வருவாரா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அன்று மாலையே சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ டிரெண்ட் ஆனது. அதில் ரோகித் சர்மா மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார்.
இதன் மூலம் ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார் என தெரிகிறது. தன்னுடைய பேட்டிங் பயிற்சியின் போது, உடல் எடை கூடியிருப்பதால் தான் தமது ஃபார்ம் பாதிக்கப்பட்டிருப்பதாக ரோகித் சர்மா உணர்ந்ததை அடுத்து தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் ரோகித் சர்மா ஒரு,இரு நாள் மீண்டும் பயிற்சிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவை ரஞ்சிப் போட்டியில் விளையாட வைக்க,மும்பை அணி தேர்வு குழு அவரை சந்தித்து பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுபோன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பெறாத ஜெய்ஷ்வால், ரஞ்சி போட்டியில் பங்கேற்க முடிவு செய்து இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கில்லும் பஞ்சாப் அணிக்காக விளையாட போவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.