கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் நடந்துக்குங்க.. 3 ஆண்டுகள்னு எப்படி போடலாம்.. ஸ்டார் மீது ரோகித் தாக்கு
இந்தூர் : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 30 வது சதம் அடித்து ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா தாம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் நான் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்ததாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

சரியான தகவல்கள்
நான் இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமே 12 ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறேன். ஆனால் நீங்கள் மூன்று ஆண்டுகள் என்று குறிப்பிடுவது மிகவும் நீண்ட காலம் போல் தெரிகிறது. உங்களுக்கு என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும். இந்த தவறை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் தான் செய்தார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவர்களும் சரியான தகவல்களை குறிப்பிட வேண்டும்.

வீட்டில் இருந்தோம்
நான் ஏற்கனவே சொன்னது போல் 2020ல் கொரோனா காரணமாக எந்த ஒரு போட்டியும் நடைபெறவில்லை. நாம் அனைவருமே வீட்டில் தான் அமர்ந்திருந்தோம். அதன் பிறகு ஒரு நாள் போட்டியே அவ்வளவாக இந்திய அணி விளையாடவில்லை. நான் காயம் அடைந்திருந்தேன். அப்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடினேன். நீங்கள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இது போன்ற செய்தியை வெளியிட வேண்டும். 2021-22 ஆம் ஆண்டு முழுவதும் டி20 உலக கோப்பைக்காக வெறும் டி20 போட்டிகள் மட்டுமே விளையாடினேன்.

டி20 போட்டிகள்
டி 20 கிரிக்கெட்டை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவை விட சிறந்த பேட்ஸ்மேன் வேறு யாரும் இப்போது கிடையாது. அவர் மட்டும்தான் இரண்டு சதம் அடித்திருக்கிறார். மற்ற யாரும் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நேற்றைய ஆட்டத்தை ஷர்துல் தாக்கூர் மாற்றிவிட்டார். அவருடைய இரண்டாவது ஸ்பெலில் டேரல் மிட்செல் மற்றும் டாம் லாட்டம் விக்கெட்டுகளை தொடர்ந்து இரண்டு பந்தில் எடுத்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கிய கட்டத்தில் அவர் எடுக்கும் விக்கெட்டுகள் இந்திய அணிக்கு சாதகமாக அமைகிறது.

பாராட்டு
ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல டெஸ்டிலும் அவர் இது போன்ற முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இது போன்று அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். டாம் லாத்தம் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா, விராட் கோலி,சர்துல் தாக்கூர் ஆகிய மூன்று பேர் மட்டும் இணைந்து யுக்திகளை அமைத்து செயல்பட்டார்கள். இதற்காக நான் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த பெரிய தொடருக்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். முழு உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவை சந்திப்போம் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications