மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான நெருக்கடியான போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார்.
ரோகித் சர்மா மட்டும் அபாரமாக விளையாடி 87 ரன்கள் சேர்த்தார். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் சதம் அடிப்பதற்காக விளையாடி வரும் நிலையில் ரோகித் சர்மா தற்போது ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில், என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். நான் பேட்டிங் செய்யும்போது அணியின் நிலைமையும் சூழ்நிலையும் மட்டுமே மனதில் வைத்துக் கொள்வேன். நான் பேட்டிங் செய்ய செல்லும்போது யோசிக்காமல் பேட்டை சுற்றுவதில்லை. என்னுடைய பேட்டை நான் சரியாக பயன்படுத்த வேண்டும். நன்றாக விளையாடி அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும்.
இதுதான் என்னுடைய திட்டமாக இருக்கிறது. நான் பேட்டிங் செய்ய வரும்போது அணியின் ஸ்கோர் ஜீரோவாக தான் இருக்கும். நான் தான் போட்டியில் நாம் எப்படி விளையாட போகிறோம் என்பதை என்னுடைய பேட்டிங் மூலம் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஸ்கோர் போர்டு ஜீரோவாக இருப்பதால் அதை நான் நல்லதாகவே கருதுகிறேன்.
ஏனென்றால் எந்த நெருக்கடியும் இருக்காது. காரணம் நாம் பேட்டிங் செய்யும்போது எந்த விக்கெட்டும் விழுந்து இருக்காது. இதனால் சில சமயம் பயமின்றி விளையாடலாம். ஆனால் கடைசியாக நாங்கள் விளையாடி ஆட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்ததால் நெருக்கடிக்கு ஆளானோம். இந்த உலகக் கோப்பையில் அனைத்து அணிகளுமே நன்றாக விளையாடி வருகிறார்கள். எல்லாருமே வெற்றிக்காக தான் விளையாடுகிறார்கள்.
இதனால் யார், யாரை வீழ்த்தினாலும் அப்செட் என்று சொல்லக்கூடாது. ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் நிகழ்காலத்தில் தான் நாம் இருக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்து அணிக்காக உழைக்க வேண்டும். ஒரு அணிக்கு என்ன தேவையோ அதை தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் எந்த அணியை எதிர்கொண்டு விளையாட போகிறோம் என்பதெல்லாம் குறித்து யோசிக்கவில்லை. எங்கள் அணியில் என்ன செய்ய முடியுமோ அதை தான் நாங்கள் பார்க்கிறோம். ஹர்திக் பாண்டியா உடல் தகுதி மீண்டும் வருகிறார். அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என நம்புகிறேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.