அரையிறுதிக்கு செல்லுமா இந்திய அணி? ரோகித் சொன்ன "நச்" பதில்.. உலககோப்பை சவால்கள் குறித்து கருத்து
மெல்போர்ன் : பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி மெல்போர்ன் வந்து அடைந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ரோகித் சர்மா பிசிசிஐ இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதனை தற்போது காணலாம்.
இந்தியா உலகக் கோப்பையை வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உலக கோப்பையை மீண்டும் வெல்ல வேண்டும் என்பது எங்கள் அனைவரின் குறிக்கோளாகும்.

யோசிக்கவில்லை
இதற்காகத்தான் கடந்த 12 மாதங்களாக உழைத்து வருகிறோம். சரியான விஷயங்களை செய்தால் மட்டுமே உலக கோப்பையை வெல்ல முடியும். நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவில்லை. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு அரை இறுதிக்கு செல்ல முடியுமா? இறுதிப் போட்டிக்கு செல்ல முடியுமா? என்பது குறித்து எல்லாம் யோசிக்கவில்லை.

சரியான திசை
நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணியை எதிர்கொள்கிறோமோ அவர்களை மட்டுமே கவனம் செலுத்தி அவர்களுக்கு எதிராக எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்பதை குறித்து யோசிக்கிறோம். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சிறப்பாக தயாராகி சரியான திசையில் செல்ல வேண்டும் என முயற்சிக்கிறோம். பாகிஸ்தானுடன் விளையாடினாலே அந்தப் போட்டி பிளாக்பஸ்டர் போட்டியாக இருக்கும்.

முயற்சி செய்வோம்
ஏராளமான மக்கள் அந்த போட்டியை கண்டு களிப்பார்கள். இதனால் எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. வீரர்களாகிய எங்களுக்கு இது ஒரு பெரிய போட்டி தான். முதல் போட்டி என்பதால் வெற்றி பெற முயற்சி செய்வோம். எங்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படாமல் ஜாலியாக , ரிலாக்ஸ் ஆக இருந்து அந்தப் போட்டியை எதிர்கொள்ள முயற்சி செய்வோம்.அணியில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு போட்டியில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

மகிழ்ச்சியாக உள்ளது
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு முக்கிய அணிகளை வீழ்த்திய உத்வேகத்துடன் எங்கள் அணி உள்ளது. ஆனால் அது சொந்த மண்ணில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய ஆடுகளம் வித்யாசமானவை.இந்த ஆடுகளத்தில் தயார் படுத்திக் கொள்வதற்காக இரண்டு வாரத்திற்கு முன்பே ஆஸ்திரேலியா வந்து அடைந்தோம். வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பை போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.உலகக்கோப்பை போன்ற் தொடரில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவது மகிழ்ச்சியாக நினைக்கிறேன்..


Click it and Unblock the Notifications