மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், இதை அவர் எப்போதோ செய்திருக்க வேண்டும் என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டாரில் கல்லினன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மேலும், தட்டையான ஆடுகளங்களில் மட்டும்தான் ரோகித் சர்மா ரன் குவிப்பார் என்ற கருத்தையும் முன்வைத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ரோகித் சர்மா அதிக உடல் எடையுடன் இருப்பதால் விளையாடக் கூடாது என இதே டாரில் கல்லினன் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 7ஆம் தேதி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ரோகித் சர்மாவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

ரோகித் சர்மா தானாக விருப்பப்பட்டு ஓய்வு அறிவித்தாரா அல்லது ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற விவாதம் ஒரு புறம் நடந்துகொண்டே இருக்கிறது. எனினும், அவரது பேட்டிங் ஃபார்ம் சமீப காலமாக மோசமடைந்து வருகிறது.
கடைசியாக அவர் விளையாடிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் மிகவும் சொற்பமான ரண்களை எடுத்திருந்தார். இந்திய அணி அந்தத் தொடர்களில் தோல்வியடைந்ததற்கு ரோகித் சர்மாவின் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், டாரில் கல்லினன் ரோகித் சர்மாவின் ஓய்வு பற்றிப் பேசியதாவது: "ரோகித்தின் ஓய்வு நிச்சயமாக எப்போதோ நடந்திருக்க வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து அவர் எப்போது விலகி இருக்க வேண்டும். இதைப்பற்றி நாம் உண்மையாகப் பேச வேண்டும்.
அவர் தனது சொந்த மண்ணில் (இந்தியாவில்) ஆடிய ஆட்டத்தைப் போல வெளிநாடுகளில் ஆடியதில்லை. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அவர் தடுமாறியதை நாம் பார்த்தோம். எனவே இது இந்திய அணிக்கு எந்த வகையிலும் இழப்பு இல்லை என்றுதான் நான் பார்க்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.