“இனி வேற வழியே இல்ல ராசா”.. 3வது ODI.. 2 அதிரடி வீரர்களை களமிறக்கும் ரோகித் சர்மா.. சிக்ஸர் மழை ரெடி
மும்பை: இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரோகித் சர்மா 2 முக்கிய மாற்றங்களை செய்யவுள்ளதாக தெரிகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் வைட் வாஷ் செய்ய களமிறங்குகிறது.
மறுபுறம் எப்படியாவது பதிலடி கொடுத்துவிட வேண்டும் என இலங்கை அணியும் முனைப்பு காட்டுகிறது. இத்தகைய முக்கிய போட்டி நாளை மதியம் 1.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

3வது ஒருநாள் ஆட்டம்
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்களை செய்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். இதுகுறித்து 2வது போட்டியின் போதே பேசியிருந்த அவர், " அடுத்ததாக நியூசிலாந்துடன் மோதவுள்ளோம். எனவே அணி வீரர்களுக்கு சரியான அளவில் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். மற்ற வீரர்களின் திறமையையும் பார்க்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

ஓப்பனிங்கில் மாற்றம்
அந்தவகையில் ஓப்பனிங்கில் ரோகித்துடன் ஜோடி சேர்ந்து இஷான் கிஷான் மீண்டும் விளையாடவுள்ளார். முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு பெற சுப்மன் கில் முதல் போட்டியில் 70 ரன்களும், 2வது போட்டியில் சொற்ப ரன்களுக்கும் அவுட்டானார். எனினும் இரட்டை சதத்தை விளாசிய இஷான் கிஷானின் ஃபார்மை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இஷானை கொண்டு வருகின்றனர்.

ஸ்டாரின் வருகை
இதே போல அணியின் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் கெத்தாக கம்பேக் தரவுள்ளார். முதல் 2 போட்டிகளில் 4வது இடத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 28, 28 என இருமுறையுமே அவுட்டானார். இதனால் அவரை நீக்கிவிட்டு, நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய சூர்யகுமார் யாதவை அணிக்குள் கொண்டு வருவதாக தெரிகிறது.

அதிரடிக்கு ரெடியா?
அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இருவருமே அதிரடிக்கு பஞ்சம் வைக்காத வீரர்கள் ஆகும். முந்தைய போட்டிகளில் மிடில் ஆர்டர் சொதப்பி, லோயர் ஆர்டர் வீரர்களே கரை சேர்த்தனர். எனவே நாளைய ஆட்டத்தில் வாணவேடிக்கை இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமே இல்லை என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications