மும்பை: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின், தோனி வீடியோ காலில் வந்து அனைவரையும் வாழ்த்தியதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மனதில் இருப்பதாக கூறிய ரோஹித் சர்மா, அந்த தொடரில் விளையாடினால் கூடுதம் மகிழ்ச்சி அடைவேன் என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, இதுவரை 12 சதங்கள், 18 அரைசதங்கள் உட்பட 4,301 ரன்களை விளாசி இருக்கிறார். ஏற்கனவே டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்திருப்பதால், வரும் நாட்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக்கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை ரோஹித் சர்மா வென்று கொடுத்துள்ளார்.
இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாகவே அவர் ஓய்வை அறிவிக்க நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து யூட்யூப் சேனல் ஒன்றுக்கு ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
அதுவே என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்திற்கும் வழிவகுத்தது. கேப்டன்சியை பொறுத்தவரை எப்போதும் இந்திய அணி நிர்வாகம் இளம் தலைமுறை வீரர்களுக்கே வாய்ப்பு அளிக்கும். அதனால் தோனிக்கு பின் விராட் கோலி கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட போது, இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்திருந்தேன்.
ஆனால் கேப்டன்சி வாய்ப்புக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆனால் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக இருக்க முடியாது என்பதையும் அறிந்திருந்தேன். டி20 உலகக்கோப்பை வெற்றி என்றுமே ஸ்பெஷல் தான். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பாக தான் இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்திருந்தோம்.
இதனால் டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தோம். நாங்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு பின் ஓய்வறைக்கு வந்த போது, தோனி வீடியோ காலில் வந்து அனைவரையும் வாழ்த்தினார். அந்த செயலை மறக்கவே முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்.
நிச்சயமாக 2027 உலகக்கோப்பை மனதில் உள்ளது. டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை தொடர்ந்து உலகக்கோப்பையையும் வென்றால் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா 38 வயதை எட்டிவிட்ட நிலையில், 2027 உலகக்கோப்பையின் போது 40 வயதை எட்டி இருப்பார். இதனால் ஃபிட்னஸ், இளம் வீரர்களின் எழுச்சி ஆகியவற்றை கடந்து ரோஹித் சர்மாவால் தாக்கு பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.