மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்திருக்கிறார்.38 வயதான ரோஹித் சர்மா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக நினைக்கின்றேன்.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றேன். இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி. தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவேன் என்று ரோகித் சர்மா பதிவிட்டுள்ளார்.

இந்த சூழலில் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய டாப் 5 சிறந்த இன்னிங்ஸை தற்போது பார்க்கலாம். ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2013 ஆம் ஆண்டு தான் அறிமுகமானார். குறிப்பாக தாம் விளையாடிய முதல் போட்டியிலே ரோகித் சர்மா சதம் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 82 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த ரோகித் சர்மா 177 ரன்கள் விளாசினார். இதில் 23 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். அஸ்வினுடன் இணைந்து 301 ரன்கள் பார்ட்னர்ஷிப் ரோகித் சர்மா அமைத்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் குவித்தது.
ரோகித் சர்மாவின் இந்த ஆட்டத்தால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவரிசையில் தான் ஆரம்பத்தில் களமிறங்கி வந்தார். இதை அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்தது.
இதனை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு விசாகப்பட்டினத்தில் 244 பந்துகளை எதிர் கொண்டு 176 ரன்கள் சேர்த்தார். இதில் 23 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். அகர்வாலுடன் இணைந்து ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதே தென்னாப்பிரிக்கா தொடரில் ரோஹித் சர்மா ராஞ்சியில் 212 ரன்களை விளாசினார். 255 பந்துகளை எதிர்கொண்ட அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதில் 28 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் இந்தியா 497 ரன்கள் குவித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த தொடரில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 529 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மா இந்திய ஆடுகளத்தில் மட்டும் புலி கிடையாது இங்கிலாந்து ஆடுகளங்களிலும் அபாரமாக விளையாடி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 127 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மாவின் இந்த அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேபோன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2021 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா ஒரு மகத்தான இன்னிங்ஸ் விளையாடினார். ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதால் மற்ற வீரர்கள் தடுமாறினர். ஆனால் ரோகித் சர்மா மட்டும் 231 பந்துகளை எதிர் கொண்டு 161 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் சிறப்பான கம்பேக்கை கொடுத்தது.