“ரோஹித் செஞ்சுரி அடித்த பேட் என்னுடையது”.. லைவ் போட்டியிலேயே பெருமையாக சொன்ன லார்ட் ஷர்துல் தாக்குர்
லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்து ரோஹித் சர்மா சாதனை படைத்ததன் பின்னணியில், நம்ம "லார்ட்" ஷர்துல் தாக்குரின் சுவாரஸ்யமான உதவி ஒன்று ஒளிந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறப் போகிறார் என்ற வதந்திகள் இறக்கை கட்டிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரோஹித் சர்மா 110 பந்துகளில் 138 ரன்கள் குவித்து, லார்ட்ஸில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
ஆனால், இந்த ஆட்டத்தை ரோஹித் விளையாடியது அவருடைய சொந்த பேட்டில் இல்லை. மும்பை அணியில் தனக்கு நெருக்கமான வீரரான ஷர்துல் தாக்குரின் பேட்டை வாங்கித்தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். லார்ட்ஸில் ரோஹித் சதம் அடித்ததும், இந்தி வர்ணனை குழுவில் இருந்த ஷர்துல் தாக்குர், "நாளைக்கு இதுதான் தலைப்புச் செய்தி" என்று லைவ் போட்டியிலேயே ஜாலியாகக் கூறி காலரைத் தூக்கி விட்டுக்கொண்டார். அந்த பேட்டின் கீழ் ஷர்துல் தாக்குர் தனது பெயரை எழுதி இருந்தார்.

இது குறித்துப் பேசிய ஷர்துல், "எஸ்.எஸ் கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனம் எனக்கு சில அருமையான பேட்களை வழங்கியிருந்தது. அதன் தரத்தைப் பார்த்துப் பாராட்டிய ரோஹித், தனக்கு இரண்டு பேட்களைத் தரும்படி கேட்டார். இந்திய கிரிக்கெட்டுக்கு எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்களைத் தந்த ஹிட்மேனுக்கு என்னால் எப்படி பேட் இல்லை என்று சொல்ல முடியும்? எனது பேட்டைப் பயன்படுத்தி அவர் லார்ட்ஸில் வரலாற்றுச் சதம் அடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது" என்று பெருமையுடன் கூறினார்.
இந்திய அணியில் ஷர்துல் தாக்குரை "லார்ட் தாக்குர்" என்று செல்லமாக அழைப்பது வழக்கம். இப்போது 'லார்ட்' கொடுத்த பேட்டைக் கொண்டு 'லார்ட்ஸ்' மைதானத்தில் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார் என்று ரசிகர்கள் இதை குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 388 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய போது, ரோஹித் சர்மா 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 138 ரன்கள் எடுத்தார். இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில் ரோஹித் சர்மா சதம் அடித்தது மட்டுமே ஆறுதலாக அமைந்தது.


Click it and Unblock the Notifications

