மும்பை: இந்திய அணியின் கேப்டனாக செய்ய முடியாத சாதனையை, பயிற்சியாளராக செய்து ராகுல் டிராவிட் அசத்தியுள்ளார். 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடைந்த தோல்விக்கு மருத்து போடும் வகையில் 2024ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளார்.
நீண்ட நாட்களாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் குறித்தும், சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அதில், இந்திய அணியின் பயிற்சியாளராக எனது மோசமான நாட்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இருந்த போது வந்தது. ஏனென்றால் முதல் போட்டி வென்ற போதும், அடுத்த 2 போட்டிகளில் தோல்வியடைந்தோம். சில சீனியர் வீரர்கள் இல்லாததால், அந்த டெஸ்ட் தொடரை இழக்க வேண்டிய சூழல் நேரிட்டது.
அதேபோல் உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியும் சாதகமாக அமையவில்லை. அதன் பலனாக டி20 உலகக்கோப்பையை வென்றோம். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததால், அனைத்து பலனையும் என்னால் எடுத்துக் கொள்ள முடியாது. இந்திய அணியை வழிநடத்தியது சீனியர் வீரர்கள் தான். ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, அஸ்வின் ஆகியோர் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர்.
அதேபோல் கேப்டனாக ரோஹித் சர்மாவின் பங்கும் அசாத்தியமானது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரோகித் சர்மாவுடன் பணியாற்றிய அனுபவத்தை பெருமையாக நினைக்கிறேன். அவர் மிகச்சிறந்த தலைவர். ரசிகர்கள் அவரை நோக்கி காந்தம் போல் ஈர்க்கப்படுகிறார்கள். அது ஏராளமான மாற்றங்களை செய்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, அஸ்வின், பும்ரா ஆகியோரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
சில நேரங்கள் சீனியர் வீரர்கள் என்பதால் ஈகோவுடன் இருப்பார்கள் என்று நினைக்கூடும். ஆனால் இந்திய வீரர்கள் அப்படியே அதற்கு நேர்மாறாக இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருந்த போதும், அவர்கள் எப்போதும் நிதானமாக இருக்கிறார்கள். பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் சூப்பர் ஸ்டார் நிலையில் உள்ளதாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.