லார்ட்ஸ் மைதானத்திற்கு திடீரென வந்த ரித்திகா.. ரோஹித் சர்மா முடிவு என்ன? எகிறும் எதிர்பார்ப்பு
லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியைப் பார்க்க ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். இதை அடுத்து, ரோஹித் சர்மா இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது உறுதி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வரும் 2027ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடர் வரை விளையாட வேண்டும் என ரோஹித் சர்மா முயன்று வந்தார். ஆனால், அவரது பேட்டிங் சமீபகாலமாகச் சரிவைச் சந்தித்தது. அதனால் அவருக்கு இனிமேல் இந்திய ஒருநாள் அணியில் இடம் அளிக்க முடியாது எனத் தேர்வு குழு அவரிடம் தெரிவித்துவிட்டதாகச் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அதனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த 3வது ஒருநாள் போட்டியே அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்றும், அவர் இந்தப் போட்டியுடன் ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியானது.

ஆனால், பிசிசிஐ செயலாளர் இந்த செய்திகளை மறுத்திருந்தார். இதனால் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரா, இல்லையா? அல்லது 2027 உலகக் கோப்பை வரை அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகங்கள் ரசிகர்களிடையே நீடித்தன. இந்த நிலையில், 3வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இந்தப் போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார். அவரது கடைசிப் போட்டியைக் காண அவரது பெற்றோர் லண்டன் சென்றுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது மனைவி ரித்திகா சஜ்தேவும் மைதானத்திற்கு வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரோஹித் சர்மா வெளிநாடுகளில் ஆடும் போட்டிகளைப் பார்க்க அவரது மனைவி செல்வதில்லை. இந்த இங்கிலாந்து தொடரின் முதல் 2 போட்டிகளை பார்க்கவும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காரணத்தால், ரோஹித் சர்மாவின் ஓய்வு பெறும் கடைசிப் போட்டியைக் காண்பதற்காகவே அவரது மனைவி ரித்திகா நேரில் வந்துள்ளார் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இஇந்தப் போட்டியின் மற்றொரு முக்கிய அம்சமாக, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இணைந்து விளையாடும் 400வது போட்டியாகவும் இது அமைந்துள்ளது. இந்திய அளவில் இரண்டு வீரர்கள் ஒன்றாக இணைந்து அதிக போட்டிகளில் விளையாடிய சாதனையை இவர்கள் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
