கொழும்பு : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பைக்கு என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதே புரியாத அளவுக்கு ஒரு முடிவை ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் எடுத்தார். அதனாலேயே இந்திய அணி இந்தப் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.
இந்திய அணி உட்பட அனைத்து முன்னணி கிரிக்கெட் அணிகளும் 2023 உலகக்கோப்பை தொடருக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு அணியும் ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றன. இந்திய அணி உள்ளிட்ட ஆசிய அணிகள், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று ஆடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்து இருக்கும் நிலையில், அந்த அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்களுக்கு தான் தற்போது ஆடி வரும் தொடர்களில் வாய்ப்பு அளித்து அவர்களின் பயிற்சிக்கு உதவி செய்து வருகின்றன.
ஆனால், இந்திய அணியில் உலகக்கோப்பையில் இடம் பெறாத வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுத்து தன் வள்ளல் தன்மையை வெளிக்காட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா. இதனால், இந்திய அணிக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.
வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஐந்து மாற்றங்களை செய்தது. அணியில் வாய்ப்பு பெற்ற அந்த ஐவரில் திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா என இரண்டு வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இல்லாதவர்கள். மாற்று வீரர்களாக கூட அவர்கள் பெயர் இடம் பெறவில்லை.
இதில் திலக் வர்மாவுக்கு வங்கதேசத்திற்கு எதிரான இந்தப் போட்டி தான் அறிமுக ஒருநாள் போட்டி. உலகக்கோப்பை அணியில் திடீரென ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் திலக் வர்மாவை அழைக்க வாய்ப்பு உள்ளது என ஒரு சப்பைக்கட்டு கட்டினாலும், ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கூட ஆடாத வீரரை முன்னிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
இளம் வீரர்களை அறிமுகம் செய்யும் வேலையை எல்லாம் உலகக்கோப்பைக்கு பின் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அதை செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உலகக்கோப்பை தொடருக்கு 20 நாட்களுக்கு முன் அவரை அறிமுகம் செய்தது எந்த வகையில் சரி?
மேலும், திலக் வர்மாவை டாப் ஆர்டரில், விராட் கோலி பேட்டிங் செய்யும் இடத்தில் பேட்டிங் செய்ய வைத்தார் ரோஹித். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் போட்டிதானே என அவரது பேட்டிங் செயல்பாட்டை நாம் விட்டுவிடலாம். ஆனால், இந்தப் போட்டியில் விராட் கோலியை ஆட வைத்திருக்கலாம். உண்மையில் அவருக்கு தான் தொடர்ந்து பயிற்சி தேவை.
விராட் கோலி சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்து வந்தார். ஆனால், சமீப காலமாக அந்த ஃபார்ம் அவரிடம் இல்லை. அவர் இப்போதும் நன்றாகவே ஆடுகிறார். ஃபார்ம் அவுட் எல்லாம் ஆகவில்லை. ஆனால், அவரின் அந்த பழைய அதிரடி ஃபார்மை அவர் இன்னும் மீட்டெடுக்கவில்லை. அதற்கு உதவும் வகையில் அவருக்கு மிகவும் பிடித்த கொழும்பு மைதானத்தில் அவரை ஆட வைத்திருக்கலாம். ஏற்கனவே அந்த மைதானத்தில் நான்கு சதம் அடித்த அவர் தன் ஐந்தாவது சதத்தை அடித்தால், உலகக்கோப்பைக்கு முன் அவருடைய தன்னம்பிக்கை பன்மடங்காக அதிகரிக்கும்.
ஆனால், திலக் வர்மாவிற்கு காரணமே இல்லாமல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவரையாவது விராட் கோலி இறங்கும் மூன்றாம் வரிசையில் ஆட வைத்திருக்கலாம். ஆனால், அவரை பினிஷராக மட்டுமே பயன்படுத்துவோம் என ரோஹித் கூறினார். அவர் ஆறாம் நிலையில் இறங்கி அடித்து ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தது தான் மிச்சம். இனியாவது உலகக்கோப்பை பற்றி மட்டும் கேப்டன் ரோஹித் சர்மா சிந்திக்க வேண்டும்.