மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மோசமாக விளையாட வேண்டும் என்று தேர்வுக் குழுவில் உள்ள சிலர் எதிர்பார்த்திருந்ததாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ஆனால் தங்கள் மீதான விமர்சனங்களுக்கும் இரு வீரர்களும் பதிலடி கொடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா - விராட் கோலி இருவரும் 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 121 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலமாக இரு வீரர்களும் ஓய்வு பெற வேண்டும் என்று விவாதித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கியதோடு, 2027 உலகக்கோப்பை வரை இருவரும் விளையாடுவார்களா என்று அஜித் அகர்கர் சந்தேகம் எழுப்பினார். ஆனால் ரோகித் சர்மாவோ 11 கிலோ எடையை குறைத்து மீண்டும் பழைய ஃபிட்னஸ் உடன் களமிறங்கினார்.
ஆனால் இரு வீரர்களும் ரன்கள் சேர்க்கவில்லை என்றால், இருவரையும் ஓய்வை நோக்கி தள்ள தேர்வுக் குழு காத்திருந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றுள்ளதோடு, விராட் கோலியும் தன்னுடைய கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மீண்டும் ஒரு தீபாவளியை கொண்டாடினர்.
இதுதொடர்பாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசுகையில், தங்களின் தோல்விக்காக பலரும் காத்திருக்கிறார்கள் என்பதை ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் நன்கு அறிந்திருந்தனர். தேர்வுக் குழுவைச் சேர்ந்த சிலரும், மீடியாவும் அவர்கள் ரன்கள் சேர்ப்பதை விரும்பவில்லை. ஆனால் இருவருமே விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர்.
ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் தங்களின் முடிவில் தீர்மானமாக இருந்ததோடு, கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் போராடினார்கள். நிச்சயமாக 2027 உலகக்கோப்பை தொடருக்கு இரு வீரர்களும் தேவை. தென்னாப்பிரிக்காவில் உள்ள பவுன்ஸ் பிட்சில் இரு அனுபவம் வாய்ந்த வீரர்களின் தேவையும் உள்ளது. ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு, அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உணர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.