சிட்னி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் வீரர் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா 14,234 ரன்களுடன் 2வது இடத்தில் இருந்த நிலையில், விராட் கோலி இன்று அடித்த அரைசதத்துடன் சங்கக்காராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களுக்கு 236 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அபார ஆட்டத்தை அசால்ட்டாக வெற்றி பெற்றது.

38.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இந்திய அணி 237 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 125 பந்துகளில் 3 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 121 ரன்களையும், விராட் கோலி 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 74 ரன்களை குவித்தனர். இந்தப் போட்டியில் விராட் கோலி வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்ச்சி இருக்கிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களை விளாசி இருக்கிறார். இதன்பின் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சங்கக்காரா 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,234 ரன்களுடன் 2வது இடத்தில் இருந்தார்.
இதன்பின் விராட் கோலி 14,176 ரன்களுடன் 3வது இடத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி 74 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலமாக 305 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 51 சதங்கள், 75 அரைசதங்கள் உட்பட 14,250 ரன்களை விளாசி, அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இதன் மூலமாக சச்சின் டெண்டுல்கருக்கு பின் விராட் கோலி என்ற கூற்று நிரூபணமாகி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் வெற்றிகரமான சேஸிங்கில் விராட் கோலி 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் 2027 உலகக்கோப்பை தொடருக்கான விராட் கோலியின் பயணம் தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.