சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி மட்டுமல்லாமல் பல்வேறு ருசிகர சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்த குடும்ப பெண் ஒரே இரவில் செலிபிரிட்டி ஆனார்.
ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சிஎஸ்கே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கல்லூரியில் காதல், பேருந்தில் காதல், திரையரங்கில் காதல் என பல்வேறு காதல்களை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்த இடத்தில் ஒரு காதல் மலர்ந்து உள்ளது. சொல்லப்போனால் அதன் பிறகு நடந்தது தான் வைரலானது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியை தழுவினாலும், அந்தப் போட்டியை பார்க்க வந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஒரு டிவிட் போட்டுள்ளார்.
அதில் கே கே ஆர், சி எஸ் கே மோதிய ஆட்டத்தில் நான் ஒரு அழகான பையனை பார்த்தேன். நான் ஐ கேலரியில் அமர்ந்திருந்தேன். நான் Y வரிசையிலும் அந்த இளைஞன் X வரிசையிலும் இருந்தார். எப்படியும் சீட்டு எண் 30 லிருந்து 60 குள் இருக்கும் என நினைக்கிறேன். சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அந்தப் பையன் அணிந்து இருந்தார். நாங்கள் இருவரும் பலமுறை பார்த்துக்கொண்டோம்.

எனக்கு அந்தப் பையனை யாராவது தேடித் தர முடியுமா என ரசிகர்களுக்கு அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ட்விட் தற்போது வைரல் ஆகிவிட்டது. இதனை அடுத்து பலரும் தாம் தான் அந்தப் பையன் என்று சேப்பாக்கம் மைதானத்தில் எடுத்த புகைப்படத்தை போட்டு அந்த பெண்ணை கிண்டல் செய்து வருகிறார்கள்.
மேலும் பலரும் இந்தப் பையனா என பலரை டேக் செய்து உதவி வருகிறார்கள். இதற்கு பதில் அளித்துள்ள சென்னை அணி நிர்வாகம் எங்களுடைய மேட்ச் தான் சரியாக போகவில்லை. உங்களுக்காவது சரியாக நடக்கட்டும் என்று twitter-ல் பதில் அளித்துள்ளது. இன்னும் சிலர் இது ட்விட்டரில் வைரல் ஆவதற்காக இப்படி பதிவிட்டு இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு தகுந்தார் மாதிரி, அந்த பெண்ணும் நான் சும்மா சொன்னேன் என்று கூறி நழுவி விட்டார்.