ஜெய்ப்பூர் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 180 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி, ஜெய்ஸ்வால் அடித்த சதம் காரணமாக 9 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
கடந்த சில போட்டிகளில் ஜெய்ஸ்வால் பெரிதாக ரன் குவிக்காத நிலையில் அவருக்கு இந்திய அணியிலேயே இடம் அளிக்கப்படாது என கூறப்பட்டு வந்தது, இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சகட்டுமேனிக்கு அடித்துத் தள்ளிய ஜெய்ஸ்வால் தனி ஆளாக சேஸிங்கை முடித்தார்.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 6, இஷான் கிஷன் 0, சூர்யகுமார் யாதவ் 10, முகமது நபி 23 ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர். 20 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த மும்பை அணி, பின்னர் திலக் வர்மா நேஹால் வதேரா ஆட்டத்தால் மீண்டு 16 ஓவர்களில் 151 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது, நேஹால் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின் திலக் வர்மா அரைசதம் அடித்து அணியைக் காப்பாற்ற போராடிய போதும் ஹர்திக் பாண்டியா 10, டிம் டேவிட் 3, ஜெரால்ட் கோட்ஸி என பின்வரிசை வீரர்கள் வரிசையாக விக்கெட்டை பறி கொடுத்து சென்றனர். இதை அடுத்து 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. சந்தீப் சர்மா 4ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் தன் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். ட்ரென்ட் போல்ட் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றி இருந்தார்.
அடுத்து சேஸிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் கடந்தார். சஞ்சு சாம்சன் மூன்றாம் வரிசையில் இறங்கி அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார். ஜெய்ஸ்வால் சதம் கடந்து 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் 38 ரன்கள் குவித்து இருந்தார். 18.4 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.