
கோவை vs திண்டுக்கல்
கடந்த ஆக.11 அன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்ரீதர் ராஜூ 17 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3-வது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் சிறப்பான விளையாடினார். அவர் 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். மற்றபடி முகிலேஷ் 17 ரன், வெங்கடராமன் 1 ரன், கேப்டன் ஷாருக் கான் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டும் எடுத்தது.

வெளியேற்றுதல் போட்டி
இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணியில் ஓப்பனர் சுரேஷ் 9 ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் ஹரி நிஷாந்த் கேப்டன் நாக் இன்னிங்ஸை ஆடினார். அவர் 44 பந்துகளில் 59 எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். இறுதியில் ஆர் விவேக், 26 பந்துகளில் 52 ரன்கள் விளாச 17.3வது ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. விவேக் 6 சிக்ஸர்களை நொறுக்கி அரைசதம் அடித்தார். இந்த நிலையில் கடந்த (ஆக.13) அன்று மற்றொரு வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் அணியும், தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.

கில்லீஸ் வெற்றி
இதில், முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மெகா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் மட்டும் 56 ரன்கள் எடுக்க, அவரைத் தவிர இரண்டு வீரர்கள் மட்டும் டபுள் டிஜிட் ரன்களை எட்டினர். மற்ற அனைவரும் சிங்கிள் டிஜிட் தான். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டும் எடுத்தது. சூப்பர் கில்லீஸ் சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சுதந்திர தினம்
இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுஷிக் காந்தி 53 ரன்கள் எடுக்க, அந்த அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இன்று (ஆக.15) சுதந்திர தினத்தன்று திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

கோப்பை யாருக்கு?
லீக் போட்டியிலும், முதலாவது தகுதிச் சுற்றிலும் திருச்சி வாரியர்ஸிடம் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தக்க பதிலடி கொடுத்து கோப்பையைக் கைப்பற்ற காத்திருக்கிறது. லீக் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த திருச்சி வாரியர்ஸ் அணி, முதலாவது தகுதி சுற்றில் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக 154 ரன்கள் இலக்கை சேஸ் செய்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் நிதிஷ் ராஜகோபால் (280 ரன்), ஆதித்யா கணேஷ் (239 ரன்), பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் சரவணகுமார் (13 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர் மதிவண்ணன் (11 விக்கெட்) ஆகியோர் திருச்சி அணியின் நம்பிக்கை அளிக்கின்றனர்.

பிளேயிங் லெவன் என்ன?
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கவுசிக் காந்தி (கேப்டன்), ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ்குமார், சோனு யாதவ், சாய் கிஷோர், சித்தார்த், பி.அருண், அலெக்சாண்டர் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளது. திருச்சி வாரியர்ஸ் அணியில் சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அட்னன் கான், ஆதித்யா கணேஷ், அந்தோணி தாஸ், சரவணகுமார், மதிவண்ணன், பொய்யாமொழி, ரஹில் ஷா (கேப்டன்), சுனில் சாம் ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. நமது தமிழ் மைக்கேல் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை காணலாம்.


Click it and Unblock the Notifications











