டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிஎஸ்கே அணியின் ருதுராஜ் 50 பந்துகளை எதிர் கொண்டு 79 ரன்கள் விளாசினார்.
இதில் மூன்று பவுண்டரிகளும் ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிக அரை சதம் அடித்த தொடக்க வீரர்கள் பட்டியலில் மைக்கேல் ஹசியை ருதுராஜ் முந்தினார். இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய ருதுராஜ் கெய்க்வாட் , இது எனக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். இந்த போட்டியில் வெற்றி பெற அணிக்காக உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது.

சிஎஸ்கே அணிக்காக இது என்னுடைய ஐம்பதாவது ஆட்டம். இதனால் இன்றைய ஆட்டத்தில் நான் நன்றாக விளையாட வேண்டும் என உத்வேகத்தில் இருந்தேன். சிஎஸ்கே போன்ற சிறந்த அணியின் ஆதரவு எனக்கு எப்போதும் கிடைக்கும். இன்னும் பல ஆண்டுகள் இருக்கும் என நம்புகிறேன். ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருந்தது.வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தது.
இதனால் சுழற் பந்துவீச்சாளர்களை அடித்து ஆட வேண்டும் என நானும் கான்வேவும் முடிவெடுத்தோம். ஒரு 10 ,12 ஓவர் வரை களத்தில் நின்றால் பிறகு துபே, தோனி ,ஜடேஜா ஆகியோர் களத்திற்கு வந்து பார்த்துக் கொள்வார்கள் என நினைத்தோம். கான்வே பேட்டிங்கில் சில இடங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைத்தார். தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். கான்வேவுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அவருடன் நேரத்தை செலவழிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாங்கள் கிரிக்கெட் பத்தியும் மற்ற விஷயங்களை பற்றியும் அதிகமாக பேசுவோம். இதனால் களத்தில் இருக்கும் போது எங்களுக்கு பதற்றம் இருக்காது. நம்பிக்கையுடன் எதிரணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வோம் என ருதுராஜ் தெரிவித்துள்ளார்.