
தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்
பேட்டிங்கிற்கு சாதகமான சிட்னி ஆடுகளத்தில் டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டி காக், 12 ரன்களில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சில், ஆன்ட்ரே ரசலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆம்லா ஜோடி
இருப்பினும், ஹசிம் ஆம்லா மற்றும் டு பிளெசிஸ் ஜோடி, மேற்கொண்டு விக்கெட் வீழாமல் பார்த்துக் கொண்டது. இதற்காக அதிக பந்துகளை அந்த ஜோடி எடுத்துக் கொண்டாலும், வலுவான அடித்தளத்தை அமைக்க இந்த பார்ட்னர்ஷிப் உதவியது. இருப்பினும், 70 பந்துகளில் 62 ரன்களை எடுத்த டு பிளெசிஸ் மற்றும் 88 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருந்த ஆம்லா ஆகியோர் ஒரே ஓவரில் கிறிஸ் கெய்ல் பந்து வீச்சில் அடுத்தடுத்து நடையை கட்டியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிரடி ஆரம்பம்
29.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்கா எடுத்திருந்த அந்த நிலையில்தான் ரிலே ரோசவ் மற்றும் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் ஜோடி அதிரடியை ஆரம்பித்தது. 39 பந்துகளில் 61 ரன்கள் விளாசிய நிலையில் ஆன்ட்ரே ரசல் பந்து வீச்சில் ரோசவ் அவுட் ஆனார். அதேபோல டேவிட் மில்லர் 20 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையிலோ கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் எதற்கும் கலங்கவில்லை. பிட்சின் குறுக்கே நடந்தும், உருண்டும் அவர் பல ஷாட்டுகளை விளாசித் தள்ளிக் கொண்டிருந்தார். ரிவர்ஸ் ஸ்வீப்பிங்கிலும் பவுண்டரிகளை வாரி சுருட்டினார்.

குறைந்த பந்தில் 150 ரன்கள் சாதனை
52 பந்துகளில் சதம் அடித்த வில்லியர்ஸ், அதன்பிறகு மேலும் உக்கிரம் அடைந்தவராய் அடித்து நொறுக்கி 64 பந்துகளில் 150 ரன்களை கடந்தார். இது ஒரு சாதனையாகும். கடைசி ஓவரை ஹோல்டர் வீச, 4 சிக்சர், 1 பவுண்டரி, ஒரு இரட்டை ரன் ஆகியவற்றை, விளாசி 66 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார் ஏபிடி வில்லியர்ஸ். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது தென் ஆப்பிரிக்கா.

கிறிஸ் கெய்ல் ஏமாற்றம்
இதையடுத்து கிறிஸ்கெய்ல், ட்வைன் ஸ்மித் ஆகியோர் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 3 ரன்களிலும், அடுத்ததாக இறங்கிய சாமுவேல்ஸ் ரன் ஏதும் எடுக்காலும் கைல் அப்பாட் பந்து வீச்சில் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வந்தது. ட்வைன் ஸ்மித் 31, ஜொனாதன் கார்டர் 10, தினேஷ் ராம்தின் 22, டேரன் சமி 5, சுலைமான் பென் 1 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினர். சிமன்ஸ், ஆன்ட்ரே ரசல் ஆகியோர் டக் அவுட் ஆகினர். ஆனால் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் சிறிது நேரம் போராட்டம் நடத்தி 56 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

257 ரன்கள் வித்தியாசம்
எனவே மே.இ.தீவுகள் அணி 33.1 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாகிர் 45 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், குரூப் பி பிரிவில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தை தென் ஆப்பிரிக்கா பிடித்துள்ளது. ஆட்ட நாயகனாக டி வில்லியர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதனை சமன்
உலக கோப்பையில் பெர்முடா அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியிருந்ததே மிகப்பெரிய வெற்றியாக இதுவரை இருந்துவந்தது. இன்று அந்த சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளை பொறுத்தளவில், 290 ரன்கள் வித்தியாசத்தில், அயர்லாந்து அணியை நியூசிலாந்து வீழ்த்தியது சாதனையாக தொடருகிறது.

இது எப்படி..
தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 162 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒட்டுமொத்த மே.இ.தீவுகள் அணியும் சேர்ந்தே 151 ரன்கள்தான் எடுத்துள்ளது. எனவே டி வில்லியர்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை தோற்கடித்துவிட்டார் என்றுதானே அர்த்தம்.


Click it and Unblock the Notifications