SA vs AUS: 60 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த மார்கோ யான்சன்.. 8வது இடத்தில் களமிறங்கி அபாரம்
கெபெரஹா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்க அணியின் மார்கோ யான்சன் 100 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அசத்தினார். கெபெரஹாவில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, எட்டாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய அவர், 60 ஆண்டுகள் பழமையான சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, எட்டாவது வீரராக யான்சன் களமிறங்கினார். கேப்டன் டெம்பா பவுமாவுடன் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த அவர், அணியின் ஸ்கோரை 242 ரன்களுக்கு உயர்த்தினார்.

மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்ட யான்சன், 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார்.சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எட்டாவது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க பேட்டர் என்ற சாதனையை யான்சன் படைத்துள்ளார்.
இதன் மூலம், 1966-ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்டில் பீட்டர் வான் டெர் மெர்வ் அடித்த 76 ரன்கள் சாதனையை அவர் முறியடித்துள்ளார். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8-ஆம் எண் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்க பேட்டர்கள் பட்டியலில், மார்கோ யான்சன் 85 ரன்கள் உடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக 1966ஆம் ஆண்டு பீட்டர் வான் டெர் மெர்வ் 76 ரன்களுடனும், ஹக் தைஃபீல்ட் 1949 ஆம் ஆண்டு 75 ரன்களுடனும், டேவ் நூர்ஸ் 1902 ஆம் ஆண்டு 72 ரன்களுடனும், ஆண்ட்ரூ ஹால் 2002ஆம் ஆண்டு 70 ரன்களுடனும், மார்க் பவுச்சர் 2006ஆம் ஆண்டு 63 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும் 3 ரன்கள் அடித்திருந்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு மைதானத்திலும் எட்டாவது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்க பேட்டர் என்ற பிரையன் மெக்மில்லனின் சாதனையை யான்சன் முறியடித்திருப்பார். மெக்மில்லன் 1998-ஆம் ஆண்டு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் அடித்திருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எட்டாவது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த ஒட்டுமொத்த உலக சாதனை வெஸ்ட் இண்டீஸின் கிளார்மாண்ட் டெபியாசா வசம் உள்ளது. இவர் 1955 மே மாதம் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் மேட் பிரையர், இந்தியாவின் விருத்திமான் சாஹா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் பாகிஸ்தானின் யாசிர் ஷா ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications


