56 ஆண்டு கால வரலாறை உடைத்து ஆஸ்திரேலியாவை கதறவிட்ட தென்னாப்பிரிக்கா.. இன்னிங்ஸ் வெற்றி மூலம் பதிலடி
கேபெர்ஹா: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கடித்து தென்னாப்பிரிக்கா புதிய சரித்திரம் படைத்துள்ளது. கெபெர்ஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதற்கு முன்பு கடந்த 1970-ல் ஜோஹன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்களில் வீழ்த்தியிருந்தது. அதன்பின்னர் 56 ஆண்டு காலத்திற்குப் பிறகு தனது சொந்த மண்ணில் அத்தகைய வரலாற்று வெற்றியை தென்னாப்பிரிக்கா மீண்டும் பதிவு செய்துள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவின் வேகத்தில் நிலைகுலைந்து 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது தனி ஒரு ஆளாகப் போராடிய கேப்டன் டெம்பா பவுமா அசாத்தியமாக ஆடி 179 ரன்கள் குவித்தார். பின்வரிசை வீரர்களின் துணையுடன் 6-வது விக்கெட்டுக்குப் பிறகு 315 ரன்கள் சேர்த்து 425/9 ரன்களில் தென்னாப்பிரிக்கா டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 36 வயதான பவுமா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சதம் அடித்த மிக வயதான கேப்டன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையைத் தகர்த்தெறிந்தார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் வேகத்தில் சின்னாபின்னமானது. ஜான்சன் 5 விக்கெட்டுகளை அள்ள, ஆஸ்திரேலியா வெறும் 99 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் 326 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கப்பட்டது. கடந்த 38 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெறுவது இது 3-வது முறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் சதம் விளாசி போராடிய போதிலும், காகிசோ ரபாடாவின் துல்லியமான பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் சரிய, ஆஸ்திரேலியா 296 ரன்களுக்கு சுருண்டது. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. முதல் டெஸ்டில் தோற்ற தென்னாப்பிரிக்கா, இந்த அசாத்திய வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்து ஆஸ்திரேலியாவுக்குப் பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications

