“சச்சினை பார்த்துதான் இப்படி ஆடினேன்.. நானும் உயரம் குறைவான..”.. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட பவுமா பேச்சு
செயின்ட் ஜார்ஜ் பார்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனி ஒருவனாகப் போராடி 179 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தனது பேட்டிங் பாணி உருவானதற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே முக்கிய காரணம் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டம் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் முதல் 3 பேட்டர்கள் வெறும் 25 ரன்களுக்குள் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே கடுமையான சரிவை சந்தித்தது.

அந்த இக்கட்டான தருணத்தில் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தைரியமாக எதிர்கொண்டார். நங்கூரம் போல நின்று ஆடிய அவர், 334 பந்துகளில் 179 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றார். இவருக்குத் துணையாக மார்கோ யான்சன் 85 ரன்களும், சைமன் ஹார்மர் 82 ரன்களும் விளாசினர். இதனால் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்தியது.
3-வது நாள் ஆட்டத்திற்குப் பிறகு பேட்டியளித்த டெம்பா பவுமா, தனது ஆதர்ச நாயகனான சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட நுணுக்கங்களை உன்னிப்பாகக் கவனித்து பின்பற்றுவதாகத் தெரிவித்தார். சச்சினைப் போலவே தானும் உயரம் குறைவான வீரர் என்பதால், பெரிய அளவில் கால்களை நகர்த்தி ஆட இயலாது என்றும், உடலுக்கு மிக அருகில் வைத்து பந்துகளை எதிர்கொள்ளும் உத்தியை சச்சினைப் பார்த்து கற்றுக் கொண்டதாகவும் கூறினார். சில சமயங்களில் இதில் சிக்கல்கள் எழுந்தாலும், இக்கட்டான சூழலில் இந்த உத்தியே கைகொடுப்பதாக அவர் விளக்கினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஆடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என பவுமா மகிழ்ச்சி தெரிவித்தார். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரியும் போது வழக்கமாக 50 அல்லது 60 ரன்களுடன் வெளியேறி விடுவதாகவும், இம்முறை அதை 179 ரன்களாக மாற்றி அணிக்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது திருப்தி தருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

