"வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடுக்கிப்பிடி திட்டம் வைத்திருக்கிறோம்".. நியூசிலாந்து பவுலர் டஃபி வார்னிங்
ஆக்லாந்து: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 22 அன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்த நியூசிலாந்து அணி தனியாக வியூகம் அமைத்துள்ளதாக வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிவேக பேட்டிங் மூலம் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் மீது சர்வதேச அளவில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி, வைபவ் சூர்யவன்ஷி ஒரு அசாத்திய திறமைசாலி எனப் பாராட்டினார். ஒவ்வொரு ஆட்டத்திலும் 250 ஸ்ட்ரைக் ரேட்டுடன் தொடர்ந்து அதிரடியாக ரன் குவிப்பது மிகப்பெரிய விஷயம் என்றார். அதே சமயம், நியூசிலாந்து ஆடுகளங்கள் அவருக்கு முற்றிலும் வித்தியாசமான சவாலாக இருக்கும் என்றும், இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அவரை முடக்க சிறப்பு திட்டம் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புவனேஷ்வர் குமாருக்கு பாராட்டு
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ள அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் குறித்தும் டஃபி பேசினார். ஐபிஎல் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருவரும் இணைந்து விளையாடியதை அவர் நினைவு கூர்ந்தார்.
புவனேஷ்வர் உலகின் அதிவேக பவுலர் கிடையாது என்றாலும், அவரிடம் அபாரமான பந்துவீச்சு நுட்பம் உள்ளது என்றார். பந்தை ஸ்விங் செய்வதிலும், எதிரணி பேட்டர்களை முன்கூட்டியே கணிப்பதிலும் அவர் கைதேர்ந்தவர் எனப் புகழ்ந்தார். நியூசிலாந்து ஆடுகளங்களில் பந்துகள் கூடுதலாக எழும்பி வரும் என்பதால், அந்த பவுன்ஸை சமாளித்து இந்திய பேட்டர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்பதை களத்தில் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் ஜேக்கப் டஃபி தெரிவித்தார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 22 முதல் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications

