எனக்கு பிடித்த நடிகர்.. உருகிய சச்சின்.. இர்பான் கானுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் இர்பான் கான் தன் 54 வயதில், இன்று மும்பையில் காலமானார். அவருக்கு புற்று நோய் இருந்தது. அத்துடன் பெருங்குடல் தொற்று ஏற்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவின் திறமையான நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் அவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

பிடித்த நடிகர்
சச்சின் டெண்டுல்கர் தன் இரங்கல் செய்தியில், இர்பான் கான் தனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் எனவும், அவர் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து விடுவேன் என்றும், கடைசியாக நடித்த ஆங்க்ரேசி மீடியம் கூட பார்த்து விட்டேன் எனவும் கூறி உள்ளார். அவருக்கு நடிப்பு இயல்பாக வரும் எனக் கூறி அவரது மறைவுக்கு தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

மனதை தொட்டவர்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில், இர்பான் கான் மறைவை கேட்டு வருத்தம் அடைந்ததாகவும், அவர் அற்புதமான திறமைசாலி, தன் வித்தியாசமான நடிப்பால் அனைவரின் மனதையும் தொட்டவர் என இரங்கல் கூறி உள்ளார்.

மிகப்பெரிய திறமைசாலி
வீரேந்தர் சேவாக் தன் இரங்கல் செய்தியில், மிகப் பெரிய நடிகர், மிகப்பெரிய திறமைசாலி. அவரது குடும்பத்தினருக்கு என் நெஞ்சார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார். சுரேஷ் ரெய்னா, இர்பான் கான் மறைவு தவிப்பை ஏற்படுத்தும் என கூறி உள்ளார்.

ரத்தினங்களில் ஒருவர்
கௌதம் கம்பீர் கூறுகையில், எந்த கதாபாத்திரம், எந்த வகையான திரையாக இருந்தாலும், சில நடிகர்கள் தங்கள் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நம்மை அசைத்துப் பார்ப்பார்கள். இர்பான் கான் அப்படி ஒரு ரத்தினங்களில் ஒருவர் என பாராட்டி உள்ளார்.

பிற வீரர்கள் இரங்கல்
இவர்கள் தவிர ஆகாஷ் சோப்ரா, அஸ்வின், அனில் கும்ப்ளே, ஷிகர் தவான், ரவி சாஸ்திரி, மயங்க் அகர்வால் உள்ளிட்ட பல வீரர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் இரங்கலை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications