யுவராஜ்சிங்.. உங்க அத்தியாயம் முடியலை.. கவலை வேண்டாம்: டெண்டுல்கர் ஆறுதல்!
மும்பை: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய யுவராஜ்சிங் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் முன்னாள் வீரர் டெண்டுல்கர் யுவிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமது 'பேஸ்புக்' பக்கத்தில் யுவராஜ்சிங் பற்றி எழுதியிருப்பதாவது:

யுவி... ஒரு நாள் நீங்கள் சோபிக்காமல் போய் இருக்கலாம். அதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அணிக்கு அளித்த மிகப்பெரிய பங்களிப்புகள், பல மறக்க முடியாத இனிமையான நினைவுகளை அழித்து விட முடியாது. இன்று உங்களது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த தொய்வு நிரந்தரமானது அல்ல.
2015-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் மட்டுல்ல, உலகில் உள்ள இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நேற்று முன்தினம் மாலை உங்களுக்கு கடுமையான நாள். உங்களை எல்லோரும் விமர்சித்து இருக்கலாம். அதற்காக உங்களுடைய கிரிக்கெட் அத்தியாயம் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல.
யுவராஜ்சிங்கின் முழுமையான உத்வேகத்தை கண்டு மெச்சுபவர்களில் நானும் ஒருவன். அவர் பல்வேறு சவால்களை களத்திலும், வெளியிலும் கடந்து வந்துள்ளார். அவரது மனஉறுதியும், போராட்ட குணமும் அவரை இன்னும் வலிமையான மனிதராக வெளிக்கொண்டு வரும். தன் மீதான விமர்சனங்கள் தவறு என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவார்.
இவ்வாறு தெண்டுல்கர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications