மும்பை: 1989 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று ஒரே நேரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இரண்டு இளம் வீரர்கள் அறிமுகமானார்கள். பின் நாட்களில் இருவருமே கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக உயர்ந்தனர். அதில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர்; மற்றொருவர் வக்கார் யூனிஸ்.
1989 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தானில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடியது. இந்திய அளவில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்த 16 வயதே ஆன சச்சின் டெண்டுல்கர் அந்த தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

அதே போல, பாகிஸ்தான் அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளராக வக்கார் யூனிஸ் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வாய்ப்பு பெற்றனர். அந்தப் போட்டியின் இரண்டாம் நாள் அன்று சச்சின் டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வக்கார் யூனிஸ் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
அவரது பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து இருந்தார். வக்கார் யூனிஸ் முதல் இன்னிங்ஸில் 19 ஓவர்களில் 80 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்த போட்டி அவர்கள் இருவரது கிரிக்கெட் வாழ்வுக்கும் பெரிய தொடக்கமாக அமைந்தது.
அவர்கள் இருவரும் பின் நாட்களில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஜாம்பவான்களாக உருமாறினர். சச்சின் டெண்டுல்கர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மனாக உயர்ந்தார். அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் குவித்தார். 51 டெஸ்ட் சதம் மற்றும் 49 ஒரு நாள் போட்டி சதங்கள் அடித்து, உலகிலேயே அதிக சதம் அடித்த வீரராகவும் இருக்கிறார் சச்சின்.
மறுபுறம் வக்கார் யூனிஸ் டெஸ்ட் போட்டிகளில் 373 விக்கெட்கள் வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 416 விக்கெட்கள் வீழ்த்தினார். ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் மிகச் சிறந்து விளங்கிய வக்கார் யூனிஸ் உலகின் அச்சுறுத்தலான பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார்.
வக்கார் யூனிஸ் 2004ஆம் ஆண்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் சச்சின் டெண்டுல்கர் 2013 வரை விளையாடினார்.