லண்டன்: தான் செய்த ஒரு தவறால்தான் சச்சின் டெண்டுல்கர் இன்று கிரிக்கெட் ஜாம்பவானாக மாறினார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆலன் லெம்ப் கூறியிருக்கிறார். 71 வயதான ஆலன் லெம்ப், இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் மூன்று உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடியுள்ளார். இந்த சூழலில் ஆலன் லெம்பிடம் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

சச்சினா? கவாஸ்கரா அல்லது விராட் கோலியா என்ற ஆப்ஷன்கள் தரப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆலன் லெம்ப், சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன். இதுதான் எளிதான பதில். சச்சினுக்கு 18 வயது இருந்த போது நான் அவருடன் விளையாடியிருக்கின்றேன். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் நான் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்தபோது சச்சின் அடித்த பந்தை நான் கேட்ச் பிடிக்காமல் கோட்டை விட்டேன்.
நான் செய்த தவறால் அந்த போட்டியில் சச்சின் சதம் விளாசினார். அதன் பிறகு சச்சின் தொடர்ந்து சதங்களை அடித்து வந்து மிகப்பெரிய வீரர் என்ற பெயரை பெற்றார். இதனால் எப்போதும் நான் அவரை பார்க்கும் போது, உன்னை பெரிய ஆளாக ஆக்கியதே நான்தான் என்று நகைச்சுவையாக கூறுவேன்.
கோலி நல்ல வீரர் தான். அவரிடம் அனைத்து விதமான ஷாட்களும் இருக்கின்றது. விரைவாக ரன்கள் குவிக்கவும் செய்வார். ஆனால் சிறந்த வீரர் என்றால் அது சச்சின் தான். கவாஸ்கரை ஒப்பிட்டால் கூட அவருடன் மேலானவர் சச்சின் தான். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி உச்சத்தில் இருந்தபோது கவாஸ்கர் அவர்களுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணிலேயே அதிக சதம் அடித்தார்.
அது போல் ஒரு சூழல் சச்சினுக்கு அமையவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அந்த காலத்தில் அபாரமாக விளையாடிய ஒரே இந்திய வீரர் என்றால், அது கவாஸ்கர் தான். நான் கபில் தேவ் உடன் விளையாடிருக்கின்றேன். இருவரும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி இருக்கின்றோம். அப்போது நான் கபில் தேவை அழைத்து, நீ எங்களுடன் வந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நமது அணியின் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும் என்று கூறினேன்.அதற்கு பதில் அளித்த கபில்தேவ், இல்லை நான் என்னுடைய பந்துவீச்சை பலப்படுத்த வரவில்லை. நான் என்னுடைய பேட்டிங்கை மெருகேற்ற தான் வந்திருக்கின்றேன். நான் இங்கு ஒரு பேட்ஸ்மேனாக தான் விளையாட வந்துள்ளேன் என்று கபில்தேவ் கூறியதாக ஆலன் லெம்ப் சுட்டிக்காட்டினார்.