Deep Fake: எனக்கு எக்ஸ் தளத்தில் கணக்கே இல்லை.. நடவடிக்கை எடுங்க.. சச்சின் மகள் சாரா அறிக்கை!
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் டீப் ஃபேக் புகைப்படங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மை காலங்களாக பிரபலங்களின் டீப் ஃபேக் வீடியோ பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஒருவரின் வீடியோவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து AI தொழிற்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவாக வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த பதிவில், சமூக வலைதளங்கள் நமது வாழ்க்கையின் இன்பங்கள், துன்பங்கள், அன்றாட நடவடிக்கைகளை கூறுவதற்கும், பதிவிடுவதற்குமான சிறந்த தளமாக உள்ளது.
ஆனால் அற்புதமான சமூக தளங்களை சிலர் பொய்களை பரப்புவதற்காக பயன்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. சமூக வலைதளங்களில் எனது டீப் ஃபேக் புகைப்படங்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. எக்ஸ் தளத்தில் எனது பெயரில் போலியான கணக்குகள் இயங்கி வருவதை பார்க்க முடிந்தது. அந்த கணக்கிலேயே அது பொய்யான கணக்கு என்று கூறப்பட்டிருந்தாலும் கூட, அந்த கணக்கில் பதிவிடப்படும் புகைப்படங்கள் என்னை போல் ஆள்மாறாட்டம் செய்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு எக்ஸ் தளத்தில் எந்த கணக்கும் இல்லை. இதனால் எக்ஸ் நிர்வாகம், சம்மந்தப்பட்ட கணக்குகளை அறிந்து, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாரா டெண்டுல்கரின் பெயரில் ப்ளூ டிக்குடன் செயல்பட்டு வந்த கணக்குகள் அகற்றப்பட்டுள்ளது.
இந்திய அணியின் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அண்மை காலமாக சில இடங்களில் ஒன்றாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சாரா டெண்டுல்கர் - சுப்மன் கில் இருவரும் ஒன்றாக இருப்பது போல் சில புகைப்படங்கள் அந்த போலி எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டன. அது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிய நிலையில், சாரா டெண்டுல்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications