எங்கெங்கும் சச்சின் கோஷம்.. திருவிழாக் கோலத்தில் வாங்கடே!
மும்பை: சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளதாலும், இதுவே அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பதாலும் மும்பையே திருவிழாக் கோலத்துடன் காணப்படுகிறது. அதிலும் போட்டி நடைபெறும் வாங்கடே மைதானத்தில் ரசிகர்கள் வெள்ளம், சச்சின் கோஷம் பாடியபடி தங்களது நட்சத்திர வீரரின் கடைசி ஆட்டத்தை ரசித்துப் பார்த்து வருகிறது.
பீல்டிங் செய்வதற்காக இந்திய அணியினருடன் சச்சின் மைதானத்திற்குள் நுழைந்தபோது விண்ணே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷமும், வாழ்த்து கோஷமும், வி வில் மிஸ் யூ கோஷமும் உச்சகட்டத்தை எட்டின.
மத்திய அமைச்சர்கள், முன்னாள் வீரர்கள், ஆமிர்கான் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பல்துறைப் பிரமுகர்கள் என சச்சின் ரசிகர்கள் பட்டியல் மிக மிக நீளமானதாக இருந்தது.

போய் வா கடவுளே...
கிரிக்கெட் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும், பாசத்துடன் நேசிக்கப்படும் சச்சினின் கடைசி போட்டி அவருக்கு மட்டுமல்ல, அத்தனை கிரிக்கெட் பிரியர்களுக்கும் மிகப் பெரிய பொக்கிஷமாக அமைந்துள்ளது.

குட் லக் சச்சின்.. மனைவியின் வாழ்த்து
சச்சினின் மனைவி அஞ்சலி தனது குழந்தைகளுடன் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்தார். சச்சின் பீல்டிங் செய்ய களத்தில் இறங்கியபோது அவர் குட்லக் சொல்லி அனுப்பினார். சச்சினின் தாயார் ரஜினி டெண்டுல்கரும் மைதானத்திற்கு வந்துள்ளார்.

200வது டெஸ்ட் கண்ட முதல் வீரர்
உலகிலேயே 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரர் சச்சின்தான். எனவே இது உலக சாதனையாகும்.

வாங்கடேவில் திருவிழாக் கோலம்
வாங்கடே மைதானமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. சச்சின் 51 டெஸ்ட் சதங்களைப் போட்டுள்ளதைக் குறிக்கும் வகையில் மைதானத்தில் 51 பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

52வது சதம் போடுவாரா
மேலும் சச்சின் இந்த டெஸ்ட் போட்டியில் 52 மற்றும் 53வது சதத்தைப் போட்டு அசத்துவாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சச்சினுக்கு மேற்கு இந்தியத் தீவுகளின் நினைவுப் பரிசு
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ள சச்சினுக்கு தங்களது வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட பேக் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

பிராட்மேன் போல முட்டைக்கும் வாய்ப்புண்டோ...
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் டான் பிராட்மேன், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஒரு வேளை சச்சினுக்கும் அப்படி ஒரு நிலை வந்து விடுமோ என்ற அச்சத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications