சென்னை: கிரிக்கெட்டின் கடவுள் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். எந்தவித இலக்கும் இல்லாத இந்திய அணியில், நம்பிக்கையை விதைத்து இந்திய கிரிக்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் சச்சின் டெண்டுல்கர்.
24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த அவர், 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 18 ஆயிரம் ஒருநாள் ரன்கள் என்று யாரும் கற்பனை செய்ய முடியாத சாதனைகளை படைத்தவர்.இன்றும் சச்சின் டெண்டுல்கரின் ஏராளமான சாதனைகள் முறியடிக்கப்படாமலேயே உள்ளது. 90களில் சச்சினை மட்டுமே நம்பி இந்திய அணி விளையாடி வந்தது.

உலகக்கோப்பை தொடர் நெருங்கியுள்ள நிலையில், சச்சின் சாதனைகள் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. 6 உலகக்கோப்பையில் ஆடிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை இதுவரை எந்த வீரராலும் தகர்க்க முடியவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ரவிச்சந்திரன் அஸ்வின் சச்சின் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் இணைந்து ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை தொடர் குறித்து குட்டி ஸ்டோரிஸ் என்ற தலைப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் குட்டி ஸ்டோரிஸ்-ன் 3வது வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் சச்சின் டெண்டுல்கர் குறித்து ஹர்ஷா போக்ளே பேசுகையில், 1992ல் சச்சின் டெண்டுல்கரை மிகச்சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற கிரிக்கெட் உலகமே கொண்டாடியது. அப்போது 200 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக நேரில் பார்த்து விமர்சித்த பத்திரிகையாளர் உட்காக், ஒருவேளை சச்சின் டெண்டுல்கர் இளம் வீரராக இல்லையென்றால் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் என்று ரசிகர்கள் கொண்டாடுவார்களோ என்று ஒரு வியப்பளிக்கக் கூடிய கேள்வியை எழுப்பினார்.
1992ஆம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் வணிக ரீதியாக நல்ல வளர்ச்சியை பெற்றது. இந்தியாவின் போஸ்டர் பாயாக சச்சின் டெண்டுல்கர் மாறினார் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அஸ்வின், 90ஸ் கிட்ஸ்களுக்கு சச்சின் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் கிடையாது. அவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் என்ற பெயரே ஒரு உணர்வு தான். என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் ஒரு நம்பிக்கை.
காலையில் எழுந்தவுடன் சச்சின் டெண்டுல்கரை பார்த்தால், மனதளவில் நம்பிக்கையாக இருப்பேன். அவர் பேட்டிங்கை செய்வது மட்டும் ஒருநாளும் சலிக்கவே சலிக்காது. நீங்கள் அவரை போஸ்டர் பாய் என்கிறீகள், நான் அவரு ஒரு நம்பிக்கை என்று கூறுகிறேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் என்பவர் இளைஞர்களுக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறார். அவர் வெறும் கிரிக்கெட் வீரர் என்ற எல்லைக்குள் அடக்க முடியாத மனிதர் என்று கூறியுள்ளார்.