நான் பார்த்ததிலே... சச்சினை புகழ்ந்து தள்ளிய ரிக்கி!
டெல்லி: என்னைப் பொறுத்தவரை டான் பிராட்மேனுக்குப் பிறகு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்தான் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.
கிரேட் என்று சொல்லக் கூடிய தகுதி சச்சினுக்கு முழுமையாக உண்டு என்றும் பான்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். பிரையன் லாரா மீது தான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளபோதிலும் கூட, சச்சின் அளவுக்கு யாரும் சாதனை படைக்கவில்லை என்றும் பான்டிங் கூறியுள்ளார்.

மாபெரும் பேட்ஸ்மேன்
"Tendulkar in Wisden: An anthology" என்ற பெயரிலான நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார் பான்டிங். அதில்தான் அவரை புகழ்ந்துள்ளார். அதில் பான்டிங் கூறுகையில், டான்பிராட்மேனுக்குப் பிறகு மாபெரும் பேட்ஸ்மேன் சச்சின்தான்.

ஆட்டங்களை வெல்வதில் லாரா பெரியவர்
போட்டிகளை வெல்லும் வகையில் ஆடுவதில் பிரையன் லாரா கில்லாடி என்ற வகையில் அவர் மீது எனக்கு அதிக மதிப்புண்டு. இருப்பினும் சச்சின் அளவுக்கு யாரும் கிரிக்கெட்டில் சாதனை படைத்ததில்லை.

கிரேட் என்ற வார்த்தைக்குப் பொருத்தமானவர்
கிரேட் என்ற வார்த்தைக்கு முழுமையாக பொருத்தமானவர் சச்சின். மிக நீண்ட காலம் ஆடி சாதனை படைத்தவர் சச்சின். 200 டெஸ்ட், 463 ஒரு நாள் போட்டிகள், ஒரு டுவென்டி 20 போட்டி, 34,357 ரன்கள், 100 சதங்கள்.. கிரேட்!

நீண்ட காலம் நம்பர் ஒன்
இளம் வீரர்கள் நம்பர் ஒன் இடத்தில் ஒரு வருடமோ அல்லது ஒன்றரை வருடமோ இருக்கலாம். அது கிரேட் அல்ல. சச்சின் போல நீண்ட காலம் அதைச் சாதிக்க வேண்டும். அப்போதுதான் கிரேட்.

சச்சின் என்றால்
சச்சின் குறித்து சுருக்கமாக வர்ணிக்க வேண்டும் என்றால் competitive, passionate, driven, composed, complete என்று சொல்லலாம்.

நான் விளையாடிய வீரர்களிலேயே
நான் இணைந்து ஆடிய, எதிர்த்து ஆடிய வீரர்களிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின்தான். அவரது பேட்டிங் மிகவும் சிம்பிளானது. அவரது டெக்னிக் உறுதியானது. அவர் விளையாடும் நேரம் முழுவதும் ரசிகர்களை குஷிப்படுத்தத் தவறாதவர்.

24 வருட ஓய்வில்லா ஆட்டம்
24 வருடங்கள் அவர் ஓய்வில்லாமல் சிறப்பாக ஆடியுள்ளார். ரன்களுக்காக தொடர்ந்து ஓடியுள்ளார். தனது லட்சியத்தை அடைய போராடியுள்ளார். அவருக்குள் இருந்த உலகக் கோப்பைக் கனவு, அவரது 6வது உலகக் கோப்பைத் தொடரில் நிறைவேறியது. மலைக்க வைக்கும் ஆச்சரியங்கள் இவை.

இவர் மாதிரி யாரும் இல்லை
எந்த வீரரும் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 100 சதங்களைப் போடுவது என்பதை இனிமேல் எதிர்பார்க்கவே முடியாது. சாத்தியமே இல்லாதது அது. சச்சின் மட்டுமே அந்த சாதனைக்குரியவர்.

மென்மையான மனசுக்காரர்
சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தில்தான் அனல் பறக்கும். ஆனால் மைதானத்திலும் சரி, வெளியிலும் சரி அவர் மென்மையானர். மென்மையான மனசுக்குச் சொந்தக்காரர் என்று கூறியுள்ளார் பான்டிங்.


Click it and Unblock the Notifications