சுப்மன் கில் vs சூர்யகுமார் யார் வேண்டும்??.. சச்சின் தந்த வித்தியாசமான பதில்.. இதை எதிர்பார்க்கலையே
நாக்பூர்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய ப்ளேயிங் 11ல் சுப்மன் கில் - சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இதுகுறித்து பேசியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்று முதல் தொடங்குகிறது. நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு அணியும் தங்களது ப்ளேயிங் 11-ஐ இறுதி செய்து வைத்துக்கொள்வார்கள். ஆனால் இந்த முறை சுப்மன் கில் - சூர்யகுமார் யாதவ் இடையே நிலவும் போட்டியால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மிடில் ஆர்டர் பிரச்சினை
மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு உதவியாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடவில்லை. அவரின் 5வது இடத்திற்கு தான் இந்த போட்டி உள்ளது. கே.எல்.ராகுல் ஓப்பனிங் களமிறங்குவதால் சுப்மன் கில் மிடில் ஆர்டரில் தான் ஆட வேண்டும். ஸ்ரேயாஸை போலவே சுப்மனால் நிதானமாக நிலைத்து நின்று ரன் சேர்க்க முடியும். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரிஷப் பண்ட்-ன் பணிகளை செய்யலாம். எனவே இந்த ஒரு முடிவால் தான் அணியின் திட்டமே மாறுபடும்.

சச்சின் கருத்து
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். அதில், சூர்யகுமார் யாதவ் டி20, ஒருநாள் கிரிக்கெட் என இரண்டிலும் கலக்கி தற்போது டெஸ்டிற்கு முன்னேறியுள்ளார். இது அவருக்கான சரியான நேரம் தான். அவரின் ஷாட்களை பிடிக்காதவர்கள் இல்லை. எனினும் டெஸ்ட் கிரிக்கெட் புதிது என்பதால் சரியாக வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். என்னை கேட்டால் கே.எல்.ராகுல் - சுப்மன் கில் இடையே தான் போட்டி இருக்க வேண்டும் எனக்கூறுவேன். சூர்யகுமார் தானாக தேர்வாகலாம்.

கில் தான் வேண்டும்
இந்திய அணியின் திட்டங்களுக்குள் நான் தலையிட விரும்பவில்லை. சமீபத்திய ஃபார்மின் படி பார்த்தால் சுப்மன் கில் மிக நன்றாக விளையாடி வருகிறார். இரண்டு வடிவங்களிலும் சதமடித்து இருக்கிறார். மறுபுறம் ராகுலை எடுத்துக்கொண்டால் பெரியளவில் ரன்களை அடிக்காமல் உள்ளார். அனைத்து வீரர்களிடமும் ஏற்ற இறக்கங்கள் இருக்கதான் செய்யும். ஆனால் அணியில் இடம் வேண்டுமென்றால் தொடர்ச்சியாக ரன் குவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என டெண்டுல்கர் கூறியுள்ளார்.

அணிக்குள் வாக்குவாதம்
கேப்டன் ரோகித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடையே இந்த விவகாரத்தில் பிரச்சினை வெடித்து வருகிறது. நிதானமாக விளையாடக்கூடிய சுப்மன் கில் தான் வேண்டுமென ராகுல் டிராவிட்டும், அதிரடியாக ஆடுபவர் என சூர்யகுமாருக்காக ரோகித் சர்மாவும் வாதம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications