ஸ்ரீநகர் : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுடன் இணைந்து காஷ்மீரின் சாலைகளில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். சச்சின் கிரிக்கெட்டை விட்டு விலகினாலும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 50 வயதை எட்டினாலும் அதே எனர்ஜியுடன் அதே பழைய ஷாட்களை சச்சின் மீண்டும் விளையாடுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் ஓய்வுக்கு பின் வர்ணனை, பயிற்சி, விளம்பரங்கள், ஆலோசகர் என்று கிரிக்கெட் தொடர்புடைய பல்வேறு பணிகளை சச்சின் டெண்டுல்கர் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். சச்சின் டெண்டுல்கருடன் அவரின் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோர் உடன் சென்றுள்ளனர். ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருவதால் அர்ஜுன் டெண்டுல்கர் அவருடன் சுற்றுலா செல்லவில்லை.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்பாக காஷ்மீரின் சாலையில் திடீரென காரை நிறுத்திய சச்சின் டெண்டுல்கர், பேட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்று ஆச்சரியம் அளித்தார். அப்போது காஷ்மீர் வில்லோவில் தான் தனது முதல் பேட் தயாரானதாகவும், சகோதரி சிறுவயதில் அளித்த பேட்டும் காஷ்மீர் வில்லோவில் தான் தயாரிக்கப்பட்டிருந்தது என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காஷ்மீரில் காரில் பயணித்த சச்சின் டெண்டுல்கர் சாலையில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து நிறுத்தினார். அதன்பின் உடனடியாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுடன் சச்சினும் இணைந்து கிரிக்கெட் விளையாட, அந்த சூழலே உற்சாகமாகியது.
சச்சின் பேட்டிங் செய்ய இளைஞர்கள் சிலர் பவுலிங் செய்தனர். அப்போதும் கூட சச்சின் தனது ட்ரேட் மார்க் ஸ்வீப் ஷாட்டை ஆடினார். அதுமட்டுமல்லாமல் பேட்டை திருப்பி பிடித்து கொண்டு சச்சின் பேட்டிங் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இறுதியாக சச்சின் டெண்டுல்கர் இளைஞர்கள் அனைவருடனும் செல்ஃபி எடுத்து கொண்டு விடைப்பெற்றார். இந்த வீடியோவை பதிவிட்டு, கிரிக்கெட்டும், காஷ்மீரும்: சொர்க்கத்தில் நடக்கும் ஆட்டம் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.