RCB Tragedy: “இது துயரத்தை விட மோசமானது”.. பெங்களூர் துயர சம்பவம் குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு
பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இது குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றது.
இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அங்கிருந்து பெங்களூருக்குச் சென்று ரசிகர்கள் மத்தியில் வெற்றி விழாவை நடத்த ஆர்சிபி அணியின் நிர்வாகம் தீர்மானித்தது. கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் அமைப்பும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தன.

ஆனால், எதிர்பார்த்ததை விடக் கட்டுக்கடங்காத அளவில் ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதான வாயிலில் ஒன்று கூடினர். சுமார் 2 லட்சம் பேர் அங்கு ஒன்று கூடியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், "பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்வுகள் துயரத்தை விட மோசமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எனது மனம் இருக்கும். அமைதி மற்றும் பலத்துக்காகப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 3 அன்று ஐபிஎல் இறுதிப் போட்டி முடிவடைந்த நிலையில், ஜூன் 4 அன்று இந்த மோசமான சம்பவம் நடந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக மாநில அரசு இந்த நிகழ்ச்சியைச் சரியாகத் திட்டமிடாததுதான் இந்த மோசமான நிகழ்வுக்குக் காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த மோசமான நிகழ்வு நடந்ததற்குப் பிறகும், பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்தது. ஆனால், அவர்களுக்கு இது குறித்துத் தகவல் தெரியாது எனவும் ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட்டை ஒரு நிகழ்வாக, பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும். கிரிக்கெட் வீரர்களைக் கடவுளைப் போலப் பார்ப்பதுதான் இங்கு நடந்த மோசமான நிகழ்வுக்கு முக்கிய காரணம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


Click it and Unblock the Notifications