மும்பை: கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் பல ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒன்றாக நின்றன. அவர் ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்தச் சிகரங்களைத் தொடுவதற்கு யாரும் இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், காலம் மாறியது; விராட் கோலி ஒருநாள் அரங்கில் சச்சினின் சத சாதனையைத் தகர்த்தெறிந்தார். தற்போது, டெஸ்ட் அரங்கில் அந்த மாபெரும் சாதனைகளை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் இங்கிலாந்தின் ஜோ ரூட்.
சச்சினின் 15,921 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி, அசுர வேகத்தில் முன்னேறி வரும் ஜோ ரூட், தற்போது 13,543 ரன்களுடன் இருக்கிறார். சச்சினை முந்துவதற்கு வெறும் 2,378 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் உள்ளார். 'ஃபேப் 4' என்று அழைக்கப்பட்ட நால்வரில், இந்த ரன் வேட்டையில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட ரூட் வெகுதூரம் முன்னேறிவிட்டார் ஜோ ரூட். இந்நிலையில், தனது சாதனையை நெருங்கி வரும் ரூட் குறித்து, சச்சின் டெண்டுல்கர் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், "ஜோ ரூட்டை நீங்கள் முதன்முதலில் பார்த்தபோது உங்கள் மனதில் என்ன தோன்றியது? அவர் இப்போது 13,000 ரன்களைக் கடந்து உங்களுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்" என்று சச்சினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சச்சின் அளித்த பதில், ஒரு ஜாம்பவான் மற்றொரு ஜாம்பவானை எவ்வளவு ஆழமாகக் கணித்துள்ளார் என்பதைக் காட்டியது.
"13,000 ரன்களைக் கடந்திருப்பது ஒரு மகத்தான சாதனை, அவர் இன்னும் வலுவாகவே முன்னேறி வருகிறார். 2012-ல் நாக்பூரில் நடந்த அவரது அறிமுக டெஸ்ட் போட்டியில் நான் அவரை முதன்முதலில் பார்த்தபோதே, எனது சக அணி வீரர்களிடம், 'இங்கிலாந்தின் எதிர்கால கேப்டனை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று கூறினேன். களத்தின் தன்மையை அவர் கணித்த விதமும், ஸ்ட்ரைக்கை சுழற்றிய நேர்த்தியும் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்திலேயே, அவர் ஒரு பெரிய வீரராக உருவெடுப்பார் என்பதை நான் அறிந்துகொண்டேன்" என்று சச்சின் கூறியுள்ளார்.
சச்சின், ஜோ ரூட்டைப் பாராட்டுவது இது முதல் முறையல்ல. 2021-ல் இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது, லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் சரிவைச் சந்தித்தது. அப்போது வர்ணனை செய்த சச்சின், "இந்த இங்கிலாந்து அணியில், சரிவிலிருந்து அணியைத் தனி ஆளாகத் தாங்கிப் பிடிக்கும் திறமை ஜோ ரூட்டிடம் மட்டுமே உள்ளது" என்று குறிப்பிட்டார். இது, ரூட்டின் திறமை மீது சச்சின் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் கூட, ரூட் 3 சதங்களுடன் 537 ரன்கள் குவித்து தனது அசாத்தியமான ஃபார்மைத் தொடர்ந்தார். அவரது அடுத்த பெரிய சவால், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடர். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் சதம்கூட அடிக்கவில்லை என்ற குறையை இம்முறை அவர் மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.