சச்சின் இந்திய அணியில் இடம்பெற உதவி செய்த சக வீரர்.. கைமாறு செய்த டெண்டுல்கர்
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். களத்தில் மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியிலும் நல்ல மனதுடன் நடந்து கொள்பவர். தற்போது வரை தனது சிறு வயது நண்பர்களுக்கு பொருளதார உதவியும் செய்துள்ளார். இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின், . சமீபத்தில் ஒரு முன்னாள் சக வீரருக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியது குறித்துப் பேசினார்.
தான் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட குர்ஷரன் சிங் என்ற வீரர் அளித்த முக்கிய ஆதரவை சச்சின் நினைவு கூர்ந்தார். இரானி கோப்பையில் 'ரெஸ்ட் ஆஃப் இந்தியா'வுக்காக சச்சின் 85 ரன்களில் இருந்தபோது, அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது துணைத் கேப்டன் குர்ஷரன், உடைந்த கையுடன் களமிறங்கி பேட்டிங் செய்தார்.

இது குறித்து பேசிய சச்சின், "அது எனக்கு மிகவும் முக்கியமான போட்டி. இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றால் நான் அந்தப் போட்டியில் சதம் அடிக்க வேண்டும். அப்போது நான் 85 ரன்கள் அடித்திருந்தேன். 9 விக்கெட்டுகள் சென்றுவிட்டது. குர்ஷரன் காயமடைந்ததால், அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது."
"ஆனால் ராஜ் சிங் பேச்சைக் கேட்டு களமிறங்கி, நான் சதம் அடிக்க உதவினார். அதன்பிறகுதான் நான் இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர், குர்ஷரனும் இந்திய அணியில் சேர்ந்தார். கை உடைந்த நிலையில் அவர் வந்தது பெரிய விஷயம். அவர் எனக்காக செய்த செயல், என் மனத்தைத் தொட்டது. அங்கு நான் அவருக்கு மனதார நன்றி தெரிவித்தேன்." என்று சச்சின் கூறினார்.
"ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக நிதி திரட்ட அப்போது எல்லாம் போட்டிகள் நடத்தப்படும். அப்படி ஒரு போட்டியை நீ நடத்தினால், உனக்காக வந்து நான் விளையாடுவேன் என்று கூறி இருந்தேன். அதைப் போல் நான் சென்று விளையாட முடிந்ததில் மகிழ்ச்சி. இந்த நினைவுகள் இன்றும் என்னுடன் இருக்கின்றன. அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டேன் என்று இன்று பெருமையுடன் சொல்ல முடியும்" என்று சச்சின் கூறினார்.


Click it and Unblock the Notifications