யாரு போட்ட சட்டை.. நம்ம சச்சின் போட்ட சட்டை... ரூ. 6 லட்சத்துக்கு ஏலம்!
ஜோத்பூர்: சச்சின் டெண்டுல்கர் போட்டிருந்த சட்டை ஒன்று ரூ. 6 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.
சச்சின் ரிடையர் ஆகிப் போனாலும் அவரது நிழல் இன்னும் கிரிக்கெட் உலகை விட்டு போகவில்லை. தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே இருக்கிறார் சச்சின் செய்திகளில்.
சச்சின் டெண்டுல்கர் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை ஆடியபோது போட்டிருந்த ஜெர்சி தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. ரூ. 6 லட்சத்துக்கு அது ஏலம் போயுள்ளது. ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் நடந்த ஏலத்தின்போது இது எடுக்கப்பட்டது. பிரபலமான கிறிஸ்டி நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.

மன்னர் வாரிசு...
சிவ் ராஜ் சிங் இந்த சட்டையை ஏலம் எடுத்தார். இவர் ஜோத்பூர் மன்னர் 2ம் கஜ் சிங் வழி வந்தவர் ஆவார்.

கடைசி டெஸ்ட்...
2013ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியுடன் விடை பெற்றார் சச்சின். அது அவருக்கு 200வது டெஸ்ட் போட்டியும் கூட.

ஓவியமும் ஏலம்...
சச்சின் சட்டை தவிர பரேஷ் மைத்தி வரைந்த ஓவியம் ஒன்றும் ஏலம் போனது. இது ரூ. ஏழரை லட்சத்துக்கு ஏலம் போனது.

மேலும் பல...
இவை தவிர மேலும் பல முக்கியப் பொருட்களும் இந்த ஏலத்தில் பங்கேற்று வில போயின.

நன்கொடை...
இந்த ஏலத்தின் மூலம் வசூலான பணம் இந்திய தலைக்காய கழகத்திற்கு நன்கொடையாக அளிக்கப்படுகிறது. இந்த அமைப்பை ஏற்படுத்தியவர் சிவ் ராஜ் சிங்தான்.

விழிப்புணர்வு பிரச்சாரம்...
இவர் கடந்த 2005ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி காயமடைந்தவர் ஆவார். அதன் பின்னர் இந்தக் கழகத்தை ஏற்படுத்தி உதவி மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறார். நேற்றைய ஏலத்தின் மூலம் மொத்தமாக ரூ. 80 லட்சம் திரட்டப்பட்டதாம்.


Click it and Unblock the Notifications