டெல்லி: 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுமாறு சச்சின் டெண்டுல்கரை வலியுறுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் பல காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் தனது சொந்த நாட்டில் 200வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.

சச்சினுக்கு தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. இதனால் அவரை 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தவிருக்கிறது என்று முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சச்சினை அணுகி ஓய்வு பெறுமாறு வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. சச்சின் தானாக ஓய்வு பெறுவதாகத் தெரியவில்லை என்பதால் தான் இந்த முடிவாம்.
சச்சின் ஃபார்மில் இல்லை என்றும், அண்மையில் அவரின் ஆட்டம் சுமார் தான் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கருதுவதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் என். சீனிவாசனின் வலியுறுத்தலின்பேரில் தான் சச்சின் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.