மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. சச்சினின் மகனும், இடதுகை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர் வரும் மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.
26 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், தனது நீண்ட நாள் தோழியான சானியா சந்தோக்கை கரம்பிடிக்கவுள்ளார். இவர்களது திருமணம் வரும் மார்ச் 5, 2026 அன்று நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையின் மிகப் பிரபலமான மற்றும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சானியா சந்தோக். இவரது பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ:
சானியா, பிரபலத் தொழிலதிபர் ரவி கய்யின் (Ravi Ghai) பேத்தி ஆவார். ஹோட்டல் மற்றும் உணவுத் துறையில் இவர்களது குடும்பம் மிகவும் வலிமையானது. மும்பையில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலான 'இன்டர் கான்டினென்டல்' மற்றும் பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்டான 'ப்ரூக்ளின் கிரீமரி' ஆகியவை இவர்களது குடும்பத்திற்குச் சொந்தமானவை. சானியா சந்தோக், தனிப்பட்ட முறையில் 'Mr. Paws Pet Spa & Store LLP' என்ற செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிறுவனத்தின் இயக்குநராகவும், பங்குதாரராகவும் உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணக் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஒரு புதிய மாற்றத்தைச் சந்தித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடருக்காக, அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு வர்த்தக முறையில் மாற்றப்பட்டுள்ளார்.
லக்னோ அணி ஏற்கனவே மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை வாங்கியுள்ள நிலையில், தற்போது அர்ஜுன் டெண்டுல்கரும் அந்த அணியின் பந்துவீச்சுப் படையில் இணைந்துள்ளார். மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தத் திருமண விழாவில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.